திமுக சார்பில் வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஓவைசி கலந்துகொள்கிறார்.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தென் மாநிலத்திலிருந்து சென்ற ஓவைசி கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றதோடு. பல தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் கால் பதிக்க இருக்கிறது ஓவைசியின் கட்சி. திமுகவுடன் கூட்டணி அமைக்க ஓவைசியும், அவரது கட்சியின் தலைவர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் திமுக சார்பில் வரும் ஜனவரி 6ஆம் தேதி இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. திமுகவின் சிறுபான்மை உரிமை நலப்பிரிவு சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதின் ஓவைசியை திமுகவின் சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்து பேசினார். இதயங்களை இணைப்போம் திமுக மாநாட்டிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டிற்கு வருவதற்கு ஓவைசியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
read more: மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ அதிரடி அறிவிப்பு!
திமுக தரப்பிலிருந்து ஓவைசி அழைப்பு விடுகப்பட்டுள்ளது அவரை கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான முன்னோட்டமா என்ற எண்ணமும் இஸ்லாமிய தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓவைசிக்கு விடுத்துள்ள இந்த அழைப்பு மற்ற இஸ்லாமிய இயக்கங்களான மமக, முஸ்லீம் லீக்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




