உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்
உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் உள்ள நர்கி காவல் நிலைய எல்லைட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் டி.கே.குப்தா (46). இவர் உள்ளூர் பாஜக தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் அந்த பகுதியில் உள்ள தனது கடையை அடைத்து விட்டு சாலையில் நடந்து செல்லும்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை திரட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற அவரது ஆதரவாளர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தருவோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.