பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.
நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. அதன்பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெட்ரோல் உள்ளிட்டவற்றின் மீதான வரிச் சுமையிலிருந்து விலக்களித்து அதன் விலையைக் குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தாலும் தொடர்ந்து உயருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.
இந்த நிலையில் திண்டுக்கலில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல் கெட்டுப்போய் உள்ளது. ஏனெனில் இளைஞர்கள் அரசியலில் இல்லை. தாசில்தார் முதல் தமிழகத்தில் டெண்டர் வழங்குவது வரை லஞ்ச லாவண்யம் உள்ளது. தமிழக அரசியல் என்பது மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் கொடுப்பதுதான் என்றார். மேலும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்டபோது “பிஜேபிக்கு 2021 வாய்ப்பு கொடுங்கள். மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்கின்ற காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
read more: போஸ்டர், பேனர்களில் இனி நால்வர் படம்தான்: ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை எனச் சொல்கிறார் அண்ணாமலை. அப்போ பெட்ரோல் டீசலை யார் வாங்குகிறார்கள்? அவர்கள் மக்கள் இல்லையா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.