மின்வாரியத்தினர், காவல்துறையினர் இடையேயான மோதல் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமலும், 3 பேர் வந்த காரணத்தினாலும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன் உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்த நிலையில் உதவி மின் பொறியாளரின் உத்தரவிற்கினங்க கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின் இணைப்பை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 2 மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. பின்னர் காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.