தன் மகளுக்கு பாலியல் ரீதியாக அத்துமீறிய, இரண்டாவது கணவர் மீது போலீசார் ‘போக்சோ’ வழக்கு பதிந்தும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, தாய் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண், நேற்று அளித்துள்ள புகாரில் என் கணவர் பெயர் குமார், 2013ம் ஆண்டு, காசநோயால் இறந்துவிட்டார். எனக்கு, 13 வயதில் மகள், 9 வயதில் மகன் உள்ளனர். என் மகள் படிக்கும் பள்ளியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த கற்பகக்கனி என்பவர், என்னுடன் நட்பாக பேசி வந்தார். நான் கைம்பெண் என தெரிந்தும், இரு குழந்தைகளுக்கு தாய் என தெரிந்தும் 2019ல், திருமணம் செய்து கொண்டார். எங்கள் இருவருக்கும் தற்போது 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவர் திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக கார் வாங்கி தரக் கேட்டார்.
1.50 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி, மாத தவணைக்கு கார் வாங்கி கொடுத்தேன்.திருமணத்திற்கு பின், அவரது நடத்தை சரியில்லை. பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டறிந்தேன். மேலும், நீச்சல் கற்றுத் தருவதாக கூறி, என் மூத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
எனக்கு தெரிய வந்ததும் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் கற்பகக்கனி மீது, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை அவரை கைது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த பெண் பேசுகையில், ‘கற்பகக்கனி மீது நடவடிக்கை எடுக்க போலீசார், 5,000 ரூபாய் கேட்டனர். என்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், காவல் நிலைய கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தனர்’ எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.