ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா 238 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா 238 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
அதில், ‘ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய மாசுபடுத்தும் ஆலையாக உள்ளது. கடந்த காலங்களில் கோர்ட்டில் ஒப்புக்கொண்டதை அமல்படுத்தவில்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஒருதலை பட்சமாக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதாக குற்றம் சாட்டுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இது தவறான போக்காகும். எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.