பிரதமர் மோடி இத்தாலியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். அதற்காக இத்தாலி பிரதமர் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இத்தாலி தலைநகர் ரோம் நகரை நேற்று சென்றடைந்தார்.
நேற்றே இத்தாலி சென்ற அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகியை சந்தித்தார். பிரதமர் மோடியும் டிராகியும் சந்திப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சந்தித்து இரு நாட்டு பொருளாதாரம் குறித்த விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பு உறவுகள், கூட்டாண்மை ஆகியவை குறித்து பேசப்பட்டது. ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. இதில் கலந்துகொள்வதற்கு முன்னார் வாடிகன் நகரிலுள்ள கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபையின் உலக தலைவராக இருக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் உடனிருந்தனர். இருப்பினும் போப் பிரான்சிஸும் பிரதமர் மோடியும் மட்டுமே சந்தித்து பேசினார்கள். இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதற்குப் பின் அவர்கள் அனைவரும் வாடிகன் நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
போப் உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த வெளியுறவு துறை செயலர் ஹர்ஷ்வர்தன், “பிரதமர் மோடி போப்பை சந்தித்தது முன்கூட்டியே திட்டமிடாத நிகழ்ச்சி. பாரம்பரியத்தைப் போற்ற நிகழ்ச்சி நிரல் தேவை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். புனித தலைவருடன் சில பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். அதேபோல அவருடைய வார்த்தைகளுக்கு பிரதமர் மதிப்பு கொடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிற கட்சியினரோ இது கோவாவில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு கிறிஸ்துவர்களின் வாக்கை பெற முயலும் முயற்சி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.