மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் மட்டுமே மேற்கொண்டால் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும், நீர் சேமிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் சமூக அமைப்புகள் உள்ளிட்டோர் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை அரசு கட்டமைத்து வருவதாகவும், இதுவரை 25,000 நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுக்கான செயல்திட்டத்தை கிராம பஞ்சாயத்துகள் தயார் செய்ய வேண்டும் என்றும், இதில், குடிநீர் விநியோகம், தூய்மைப்பணி, கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நமது ஆறுகளும், நீர்நிலைகளும் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்ட அவர், கங்கை நதி சீரமைப்பு போன்று, மற்ற மாநிலங்களும் ஆறுகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.