மும்பையில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வசிக்க வீடு இல்லாமல் சாலையோரங்களில் தங்கி இருக்கின்றனர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பை பைகுலா பழமார்க்கெட் அருகில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் நள்ளிரவு நேரத்தில், தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்தவர் யார் என்று அடையாள காண முடியாத அளவுக்குத் தலை மற்றும் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இந்த கொலை தொடர்பாக போலீஸார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் தலையில், நபர் ஒருவர் கல்லைப் போட்டுக் கொலை செய்த பதிவுகள் கைப்பற்றப்பட்டன.
கொலை செய்த நபரின் புகைப்படத்தை மும்பை முழுவதும் அனுப்பி போலீஸார் தேடினர். அப்போது, முகமது அலி ரோட்டில் அந்த நபர் பிடிபட்டார். சுரேஷ் என்ற அந்த நபர் போலீஸாரிடம் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பைதோனியில் வசித்து வரும் சுரேஷ் தொடர்ந்து போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நான் இரவில் சாலையோரம் நடந்து சென்ற போது, அந்த நபர் உறங்கிக்கொண்டிருந்தார். உடனே அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டுக்கொலைசெய்தேன். அதே போல், 2015-ம் ஆண்டு குர்லா சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவரையும் இதே முறையில் கொலை செய்திருக்கிறேன்” என்று அதிர்ச்சிகர தகவலையும் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் சுரேஷ் குறித்து விசாரித்த போது, அவர் சைக்கோ கொலையாளி என்பதும், ஏற்கெனவே பல கொலை வழக்குகளில் சிறைக்குச் சென்றவர் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சைக்கோ கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.