பிரான்சில் இருந்து 2-வது பேட்ச்சாக மேலும் 4 ரபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்காக விமானப்படை அதிகாரிகள் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் ரூ.59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தின் படி பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கி வருகின்றது.
இந்த விமானங்கள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்குள் விமானப்படையில் சேர்க்கப்படும் என சமீபத்தில் விமானப்படை தளபதி கூறியிருந்தார்.
இதில் முதற்கட்டமாக 10 விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதில் 5 விமானங்கள் இந்திய அதிகாரிகளின் பயிற்சிக்காக அங்கேயே வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி இந்தியா வந்தடைந்தது. அவை கடந்த மாதம் 10-ந்தேதி முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக மேலும் 4 விமானங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த விமானங்களை பெறுவதில் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக விமானப்படையின் அதிகாரிகள் குழு ஒன்று பிரான்ஸ் சென்றுள்ளது.
விமானப்படை கேப்டன் மட்டத்திலான அதிகாரி ஒருவர் தலைமையிலான ரபேல் திட்ட மேலாண்மை குழு ஒன்று பாரீசில் அலுவலகம் அமைத்து ஏற்கனவே இயங்கி வருகின்றது. அவர்களுடன் தற்போது சென்றுள்ள அதிகாரிகளும் இணைந்து அங்கு இருக்கும் விமானப்படை தளத்தில் முகாமிட்டு, ரபேல் விமானங்களை பெறுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ரபேல் போர் விமானங்களில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வசதிகள் மற்றும் ஆயுதங்களை இணைக்கும் பணிகளை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய விமானப்படை அதிகாரிகள் அடிக்கடி பிரான்ஸ் சென்று கவனித்து வருகிறார்கள். இதைப்போல இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படை விமானிகள் அங்கு தொடர்ந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.