ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவர் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி கூறினார்.
ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதற்காக ஆரம்பிக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனை ரஜினி நியமித்தார்.
இதனிடையே தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என அறிவித்து, தன்னை நம்பியவர்களிடம் மன்னிப்பு கேட்டு நேற்று அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த். இதனால் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்தார் தமிழருவி மணியன். அர்ஜுன மூர்த்தி நிலைப்பாடு என்ன எனத் தெரியாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் பேட்டியளித்த அர்ஜுன மூர்த்தி, ரஜினிகாந்த் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். ஏனெனில் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசையோடு அவர் இருந்தார். மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக இப்போது கட்சி ஆரம்பித்து செயல்பட முடியாத சூழலில் இருக்கிறார். அவர் உடல்நலன் கருதி எடுத்த முடிவாக இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
read more: தேர்தலுக்காக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்
மோடியும் ரஜினியும் என்னுடைய இரண்டு கண்கள் போன்றவர்கள். இருவரும் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள். ரஜினி மீது நான் வைத்திருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக சேர்ந்து செயல்பட முடிவெடுத்தேன். இப்போதைய சூழலில் ரஜினியின் முடிவை யாரும் விமர்சனமும், எதிர் கருத்தும் கூற வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். ரஜினியுடன் தொடர்ந்து பயனிப்பேன் எனவும் அவர் அறிவித்தார்.