துணை ராணுவமான ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர் ஒருவர் சக வீரர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினார். இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று காலை 3.30 மணியளவில் இந்த பதற வைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள லிங்கா பள்ளி கிராமத்தில், ரிசர்வ் போலீசின் 50-வது படைப்பிரிவு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் இங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், ரிதேஷ் ரஞ்சன் என்ற வீரர் இன்று அதிகாலை 3.30க்கு தனது ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினார். இதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்து விட்டார்களா என்பதை அறிய முடியாத நிலையில், வீரர்கள் அனைவரும் உடனடியாக தெலங்கானா மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ராஜ்மணி குமார் யாதவ், ரஜிப் மண்டல், தாஞ்சி, தர்மேந்திர குமார் என்கிற 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ரிதேஷ் குமார் எதற்காக திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார், வீரர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை கைது செய்து ரிசர்வ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவம் கடந்த ஜனவரியிலும் நடந்தது. இதே சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ரிசர்வ் போலீஸ் வீரர் சக வீரர் ஒருவரைசுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.




