நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பார்வையற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரை கேலி கிண்டல் செய்து நடனமாடி, அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்ட 9 ம் வகுப்பு மாணவர்களின் செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அனைத்து ஆசிரியர்களும் இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலனே முக்கியம் என செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தும் போது, அவரது பார்வை குறைபாட்டை கிண்டல் செய்து, மாணவர்கள் சிலர், ஆபாச பாடல்களுக்கு வகுப்பறையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுசத்திரம் அரசுப்பள்ளியில் பார்வையற்ற ஆசிரியராக பன்னீர் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர், 9ம் வகுப்பிற்கு வரலாற்று பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்து, அதனை செல்போனில் டிக்டாக் வீடியோவாக எடுத்து மாணவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் மட்டுமல்லாது பள்ளிக்கு வெளியிலும் செல்லும் போது, பார்வை திறனற்ற ஆசிரியர் பன்னீரை இதைவிட மோசமாக மாணவர்கள் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்து தலைமையாசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிக்கவிருப்பதாக தெரிவித்தார்.
மாணவர்களின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.