செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. அதன்பின்னர் வலுவிழந்து தீவிர புயலாக நிலப்பரப்பில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழையை தரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலின் தாக்கம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. இதனால் நேற்று மதியம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. அதன்பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் வெளியேற்றும் நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அதிகபட்சமாக வினாடிக்கு 9000 கனஅடி வரை திறக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் குறையத் தொடங்கியது. இதனால் வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 5000 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் குறையத் தொடங்கியது.
காலை நிலவரப்படி, ஏரிக்கு நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 4,371 குறைந்துள்ளது. 24 அடி மொத்த நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர்மட்டம் 21.85 அடியாக உள்ளது. 19 மதகுகள் வழியாக நேற்று திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, தற்போது 5 கண்மதகுகளில் இரண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.