28 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான்.

டெல்லி, கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் “ரேவ் பார்ட்டி” நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு ( மும்பை ) பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சாதாரண உடையில் அதிகாரிகளும் கப்பலில் பயணித்தார்கள். அப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் ரேவ் பார்ட்டியில் பங்கேற்று இருந்ததும் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக ஆரியன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை அழைத்துவந்து முதற்கட்ட விசாரணையில் மேற்கொண்டார்கள்.
கிட்டத்தட்ட 5 நாட்கள் (7ம் தேதி) தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டு இருந்த ஆரியன் 8ம் தேதி முதல் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைத்தனர். அதன், பின்னர் நடிகர் ஷாருக்கான் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை கீழமை நீதிமன்றம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி மனு வழங்கினர். இருப்பினும் இவ்வழக்கின் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆரியன் காலை விடுதலை செய்தால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆரியன் கானின் ஜாமின் மனுவை இரண்டு நீதிமன்றங்களும் மறுத்தனர்.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடிய ஷாருக்கான் தரப்பினர் இந்திய அரசின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் மூலம் தங்களுடைய ஜாமின் மனுவை வாதாட தொடங்கினார்கள். மும்பை உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் நேற்றைய தினம் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது; குறிப்பாக விசாரணை நடைபெறக்கூடிய மும்பை நகரத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது அப்படி செல்லும் பட்சத்தில் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகள் செல்லக்கூடாது, ஜாமின் வைப்புத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினமே அவர் விடுதலை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை தொடர்பான ஆவணங்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி ஆர்தர் சாலை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுத்தது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் ஆரியன் கானின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் ஆர்தர் சாலை சிறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஆவணங்களை சரி பார்த்த பின்னர் ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆரியன் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை அவருடைய தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் நேரில் வந்து அழைத்துச் சென்றார், ஆரியன் கான் விடுதலை ஆவதை அறிந்து மும்பை ஆர்தர் சிறை முன்பு நூற்றுக்கணக்கானோர் கூடினர் அவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.




