உணவுப் பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி மயானைஸ் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்து அபராதம் விதிக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய உணவகங்களில் மயோனைஸ் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. நாளுக்கு நாள் பல உணவுகளில் மயோனைஸ் உபயோகிக்கப்படுவதால் மயோனைஸ் உபயோகிப்பை தடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி தடையை மீறி தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மயோனைஸ் விற்பனை தடை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் தடையை மீறி உணவுகளில் மயோனைஸ் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

உரிமம் ரத்து
இந்த நிலையில், உணவகங்களில் மயோனைஸ் உபயோகிக்கப்படுவதால் இதனைத் தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒரு குழுவில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் உடன் இரண்டு பேர் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி மீறி மயோனோஸ் தயாரிக்கப்பட்டால் அவர்கள் கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மயோனைஸ் தீமைகள்
மயோனைசை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மயோனைஸ் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அது சரியாகக் கையாளப்படாவிட்டால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியக்களை அவை உருவாக்கும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சுவையைத் தாண்டி உடல் நலம் பேண மயோனைசைத் தவிர்ப்பது நல்லது.





