ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததற்காக அபராதம் விதித்த அதிகாரிகள் மீது நாய்களை ஏவிவிட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும் அளவிலான பாதிப்புகளையும் , மரணங்களையும் நிகழ்த்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேலான புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், அங்கு மட்டும் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், டோம்பிவிலி பகுதியில், வளர்ப்பு பிராணிகள் கடை நடத்தி வரும் 43 வயதான சத்யநாராயண் குப்தா, தனது 2 உதவியாளர்கள் சகிதம் கடையை திறந்து வைத்து, ஊரடங்கு விதிகளை மீறியுள்ளார். அப்பகுதியில் ரோந்துவந்த மாநகராட்சி அதிகாரிகள் குழு, சத்யநாராயண் கடைக்குள் நுழைந்து, அபராதம் விதித்து உள்ளனர்.
அபராதம் கட்ட மறுப்பு தெரிவித்துள்ள சத்யநாராயண், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, அபராதம் கட்ட வலியுறுத்திய அதிகாரிகள் மீது, தனது கடையில் இருந்த நாய்களை ஏவி கடிக்க உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவத்தில், ஒரு அதிகாரியை நாய் கடித்த சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சத்யநாராயண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.