
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மார்ச் மாதம் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்து நடிக்கிறது
மேலும் ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் உடன் நடித்திருந்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார். அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். முதல்முறையாக இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘டான்’ படத்தில் தான் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து முழுக்க ஆங்கிலத்தில் ட்வீட் செய்திருந்தார் சூரி. அதைப்பார்த்த சிவகார்த்திகேயன், முதலில் ட்வீட்டை படிங்க. முழுக்க எழுத்துப் பிழை என நகைச்சுவையாக குறிப்பிட்டார். டாக்டரைத் தொடர்ந்து டானுக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.




