திமுக ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்துசெய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முதற்கட்டமாக மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் நடத்தி வருகிறார். தற்போது கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். கோவையில் நேற்று அதிமுகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டத்தில் புகுந்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நடந்த மக்கள் கிராம சபையில் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அங்கு பேசிய அவர், கரப்ஷன், கமிஷன், கலெக்ஷனைத்தான் அதிமுக ஆட்சி தொடர்ந்துகொண்டிருப்பதாகவும், விவசாயிகளை வஞ்சித்திருக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. அரசு பணத்தை காலிசெய்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்றதோடு, கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்க வைத்துள்ளது. தமிழர்களின் பெருமையை சீரழிக்கிறது இதனால், அதிமுகவை நிராகரிக்கவேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
read more:
மக்களவைத் தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தலின் போதே மாணவர்களின் கல்விக் கடன், விவசாயக் கடன் ஆகியவை ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், இடைத் தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில் மீண்டும் இவ்வாறான வாக்குறுதியை அளித்துள்ளார் ஸ்டாலின்.