சென்னை தாம்பரம் ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், ஸ்வேதாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சமயம் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஸ்வேதாவின் உடலில் சரமாரியாக குத்தினார். இதனால் பயங்கர காயமடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியை குத்திய இளைஞர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞரின் பெயர் ராமச்சந்திரன் என்பதும், இவர் ஸ்வேதாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அதற்கு அவர் காதலிக்க மறுத்து விட்டதால், பட்டப்பகலில் இந்தக் கொலையை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.
கடந்த 2016ம் ஆண்டு ஜுன் 24ம் தேதி ஸ்வாதி என்னும் ஐடி பெண் ஊழியரை, ஒரு தலைக்காதலால் ராம்குமார் என்பவர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இதே சம்பவத்தைப் போன்று இன்று தாம்பரம் ரயில்நிலையத்தில் மற்றொரு கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவிட்டதோ என்ற அச்சத்தை பெண்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஏற்படுத்தியுள்ளது.