சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர்கிரீன் கப்பலை ஓட்டிச் சென்றவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.
இந்த நீர்வழிப்பாதையில் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களுடன் நெதர்லாந்து நோக்கி பயணித்த எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி கடந்த செவ்வாய்கிழமையன்று சிக்கிக்கொண்டது.இதன் காரணமாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான இந்த எவர்கிரீன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயை மறித்து நிற்பதால் அதன் பின்னால் சுமார் 150 கப்பல்கள் வரை அணிவகுத்து நிற்கிறதாம்.
இந்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் எனவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக் CNBC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயின் வழியாகத்தான் சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 8 சதவிகிதமும் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ஓரிரு நாள்களில் கப்பலை மீட்க முடியவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை ஏறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இதனிடையே இக்கப்பல் எப்போது மீட்கப்படும் என்பது கேள்வியாக இருக்கிறது.
இக்கப்பல் மீட்கும் பணிகள் நடைபெற சில வாரங்கள் ஆகலாம் எனவும் பல ஆயிரம் கிலோமீட்டர் தூதரத்திற்கு கப்பல்கள் மாற்று வழியில் செல்வதாக இருந்தால் நிலைமை மோசமாகலாம் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளன