கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்சார் போர்டு-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. A சான்றிதழுடன் படம் வெளியான நிலையில், U/A சான்றிதழுடன் படத்தை வெளியிட அனுமதிக்கும்படி, தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி சன் டிவி நெட்வொர்க் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகளவிலான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், கூலி படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்படுவதாக தணிக்கை வாரியம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்த KGF மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், கூலி படத்தை U/A சான்றிதழுடன் வெளியிட அனுமதிக்குமாறு தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்த போது, A சான்றிதழ் காரணமாக 18 வயதுக்கு குறைந்தவர்கள் திரைப்படத்தை பார்க்க முடியவில்லை என்பதால், U/A சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.
சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் சில காட்சிகளை நீக்கினால் U/A சான்று வழங்குவதாகக் கூறிய போது, A சான்றிதழை ஏற்றுக் கொண்டு தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்சார் போர்டு-க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.




