காந்திஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு அறிவுசார் திறன் போட்டி நடைபெறுகிறது இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது இதற்கு பா. ம. க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும், அறிவுத்திறன் புதிர்ப்போட்டிகளில் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்போட்டிகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் நடத்தப்படும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்ற அறிவிப்பு தான் ஏமாற்றமளிக்கிறது. இது திட்டமிட்ட இந்தி திணிப்பு. இதை அனுமதிக்க முடியாது. அறிவுத்திறன் போட்டிகள் தமிழில் நடத்தப்படவில்லை என்பது தெரிந்தும் அப்போட்டிகளை தமிழக அரசு அனுமதித்தது பெரும் தவறாகும்.
தமிழை புறக்கணித்து விட்டு நடத்தப்படும் எந்த போட்டியையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்தால் அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். இப்போதும் கூட மாநில பாடத்திட்ட பள்ளிகளில் இத்தேர்வுகளை நிறுத்தி வைக்கலாம். மத்தியில் ஆளும் அரசு மாநில மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். மறைமுகமான வழிகளில் இந்தியை திணிக்கும் போக்கை கைவிட்டு, போட்டிகளை தமிழிலும் நடத்துவதற்கு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க, அலுவல் மொழி சட்டத்தை திருத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.