ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், அயோத்தியில் நேற்று ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை, மக்களுள் ஒருவராக மானிட அவதாரமெடுத்து, அறவாழ்வு நெறிமுறைகளை இந்த உலகுக்கு உணர்த்திய ஸ்ரீ ராமபிரான் அவதரித்த அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் அமைந்திட, நமது பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறப்பாக பூமி பூஜையை முன்னின்று நடத்தி அடிக்கல் நாட்டியது, இந்தியத் திருநாட்டில் வாழும் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் பல கோடி மக்களின் இதயங்களை அளவில்லா மகிழ்ச்சியில் திளைக்கச் செய்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலயம் அமைத்திட வேண்டுமென்று 1992-ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலேயே முழங்கி, கோடிக்கணக்கான மக்களின் எண்ணத்தை எதிரொலித்தவர் ஜெயலலிதா. அவரின் சிந்தனை செயலாகும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கத்தக்க வகையிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.