சென்னை அசோக் நகரில் தன்னுடைய செல்போனை எடுத்து விற்று அதில் மது விருந்து வைத்த நண்பனை, ஆட்டோ ஓட்டுனர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகர் எம்.ஆர் சாலையில் வசிப்பவர் தனசேகரன். ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனசேகரன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவி கணவனை பிரிந்து, தனது மகன்களுடன் வளசரவாக்கத்திலுள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனசேகரனும் அசோக் நகர் 7வது அவென்யூவில் வசிக்கும் விக்டர் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் ஆகியோர்கள் நண்பர்கள் ஆவர். இவர்கள் மூன்று பேரும் முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது, தனது நண்பர் தனசேகரன் இறந்து கிடந்துள்ளார். ஆனால், நண்பரான ரமேஷ் அங்கிருந்து மாயமாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட்ச்ஆஃப் ஆகியிருந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விக்டர், அசோக் நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்துக் கிடந்த தனசேகரனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். உயிரிழந்த தனசேகரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய அடையாளம் இருந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை. இந்நிலையில் தனசேகரனின் மனைவி ரோகினி அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் கணவரை யாரோ கொன்றுவிட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்
போலீசார் தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனசேகரை அளவுக்கதிகமாக மது குடிக்க வைத்து வயர் கொண்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது மொபைல் போனை வாங்கி பயன்படுத்திவிட்டு திருப்பித் தருவதாகக் கூறி எடுத்துச்சென்ற தனசேகர் , அன்று இரவு கேட்டபோது அதை விற்ற பணத்தில்தான் நாம் மது குடித்துக் கொண்டிருக்கிறோம் என தனசேகர் நக்கலாகக் கூறினாராம்.
இதனால் கோபமடைந்த ரமேஷ் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த தனசேகரை வயர் மூலம் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.