ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பால வெங்கடேஷ். இவர்கள் இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகின்றனர். பால வெங்கடேஷ் தங்க நகை வாங்கி விற்கும் வேலையும் அவ்வப்போது செய்து வந்தார். கடந்த 2ம் தேதி பால வெங்கடேசும், ஜெயச்சந்திரனும் தெலுங்கு வீதியில் நடந்து சென்றனர். அவர்கள் வெரைட்டிஹால் ரோடு போலீசாரை கண்டதும் அங்கேயிருந்து தப்ப முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்தபோது அவர்கள் வைத்திருந்த துணி பையில் சிலையின் சிறு பாகம் இருந்தது. போலீசார் அதை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அது ஐம்பொன் (பஞ்சலோகம்) சிலையின் கை பகுதி என தெரியவந்தது. 200 கிராம் எடையுள்ள அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, தீனதயாளன் , அருண் ஆகியோரை இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 33 கிலோ எடை கொண்ட ஒரு ஆண் சிலையும், 20 கிலோ எடை கொண்ட ஒரு பெண் சிலையும் என 53 கிலோ மதிப்பிலான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள கன்னிவாடியை சேர்ந்த தினேஷ் பாண்டியன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா வியாபாரியான இவர், சிலையை கொண்டு வந்து, ஏற்கனவே தனக்கு பழக்கமான அருணிடம் கொடுத்துள்ளார். கைதான 3 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பு இருந்துள்ளது.
அருண் மூலமாக கோவையில் உள்ள பால வெங்கடேஷ், ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் சிலையின் சிறு பாகம் கொடுத்துள்ளனர். இதை விற்பனை செய்ய முயன்றபோது இவர்கள் போலீசில் சிக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: ராஜா, ராணி சிலை என சொல்லி திேனஷ் பாண்டியன் சிலைகளை எங்களிடம் கொடுத்தார். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது என சொல்ல மறுத்து விட்டார். ராஜா சிலை 1.75 அடி உயரம், ராணி சிலை 1.5 அடி உயரத்தில் 53 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலைகள் கோயில்களில் இருந்து கொண்டு வந்தாரா?, தனி நபர் யாராவது வைத்திருந்து கொண்டு வந்தாரா? என எங்களுக்கு தெரியாது. சுமார் 3 ஆண்டு காலம் இந்த சிலைகளை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என தெரிகிறது. வழக்கமான ஐம்பொன் சிலைகள் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் இந்த சிலை மண்ணில் வைத்திருந்ததால் செம்பு நிறத்திற்கு மாறிவிட்டது. வெளியில் வைத்தால் நிறம் மாறும் என தினேஷ்பாண்டியன் தெரிவித்தார். நாங்கள் ராஜா மற்றும் ராணியின் வலது கையின் சிறு பாகத்தை துண்டித்து அதை சாம்பிள் விற்பனைக்கு கொடுத்தோம்.
மேலும் இந்த சிலைகள் சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என நினைத்து கனவுகளுடன் காத்திருந்தோம். ஆனால், சிலைகளை விற்பனை செய்து பணம் கைக்கு வரும் முன் கைதாகி விட்டோம் உணவு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள தினேஷ் பாண்டியன் கஞ்சா வியாபாரி. மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்தவர். சிறையில் பழக்கமான சிலை கடத்தல் குற்றவாளி மூலமாக இந்த சிலைகளை கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது.