கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவிலின் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்கக் கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கோவில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் எனவும் தங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும் எனவும், அந்த வகையில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பல கோவில் விழாக்களில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான் எனக் கூறியுள்ளார். கோவில்களில் முதல் மரியாதை கேட்பதன் மூலம் கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.
இதுபோன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோவில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை முடித்து வைத்தார்.




