அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.
ரயில் இயக்கப்படாததால் இவர்கள் அனைவருக்குமே பெரும் இழப்பு ஏற்பட்டது. எப்போது மறுபடியும் புறநகர் ரயில்சேவை துவங்கும் என்ற ஏக்கம் சென்னைவாசிகளிடம் இருந்து. இந்நிலையில் மருத்துவ பணியாளர்களின் போக்குவரத்துக்காக ஒரு சில இடங்களில் சிறப்பு ரயில்கள் சென்னை நகர் பகுதிக்குள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த ரயில்சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அத்தியாவசிய பணியாளர்களுக்காக அரக்கோணம் முதல் சென்ட்ரல் வரையும் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் அத்தியாவசிய மற்றும் அரசு பணியாளர்களுக்கு புறநகர் ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதன்படி, இன்று கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் செங்கல்பட்டை சென்றடைந்தது. மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடைந்தது. அதில் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி பயணித்தனர். இந்த மின்சார ரயிலில் பயணிக்க கூடியவர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணம் கிடையாது. ரயில் நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்பநிலை அறியும் சோதனை நடத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் முகக்கவசம் மற்றும் சனிட்டிஸிர் கட்டாயம் பயன்படுத்தவேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் சீரடைய வேண்டுமானால் வேலைக்கு செல்வோருக்கும், தொழில் நிமித்தமாகச் செல்வோருக்கும் புறநகர் ரயில் சேவை அத்தியவசியம் என்பது விரைவில் பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.