திருமணமான ஓராண்டில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல் ஏரியில் இருந்து மீட்பு.
சோழிங்கநல்லூர் ஏரிக்கரையை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. செல்வி, திருமணத்திற்கு முன்பு காதலித்த ஒரு வாலிபருடன், திருமணத்திற்கு பிறகும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சின்னதுரை, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், செல்வி கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தங்குவதும், சில நாட்களில் திரும்பி வருவதுமாக இருந்துள்ளார். அதன்படி, கடந்த 30ம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய செல்வி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவர், உறவினர் வீட்டில் இருப்பார், திரும்பி வந்துவிடுவார் என நினைத்து சின்னதுரை அவரை தேடாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சோழிங்கநல்லூர் ஏரியில் செல்வி சடலமாக கிடந்தார். தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செல்வி அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.