நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் நேர வேண்டும் எனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வைப் போலவே இந்த ஆண்டிலும் ஆடை, செப்பல், காதணிகள் என பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்களைக் காணலாம் வாங்க
நடப்பாண்டில் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 1,17,990 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, ஒடிசா, வங்காளம், உருது, இந்தி ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறும். தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்குத் தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு மதியம் 1.30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமர்வது நல்லது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவு எண் ஒட்டப்பட்டு இருக்கும். 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால் டிக்கெட் பரிசோதனை நடைபெற்றன. விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத அனுமதிக்கப்படுவர். 5 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு அறையைவிட்டு வெளியேற அனுமதி இல்லை.
தேர்வு மையத்தின் உள்ளே மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஜியோ மெட்ரிக்பாக்ஸ், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைப்பேசி, புளூடூத், கை கடிகாரம், பென்டிரைவ், காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் கடந்த ஆண்டைப் போல அனுமதி இல்லை.
நீட் தேர்வு எழுத வருவோர் மென்மையான நிறத்திலேயே ஆடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு மட்டுமே அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணிந்து வருவோரின் சட்டை கடந்த ஆண்டைப் போலவே கிழித்து அனுமதிக்கப்படுவர். மதம் சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும். மேலும், தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது.
ஏற்கெனவே மாணவர்கள் அணிந்து வரும் முகக் கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் வழங்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன




