சென்னை நகரில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தற்போது இல்லை. இது தொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீசார் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கூறியுள்ள வழிமுறைகள்:
- அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும், வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கறுப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து வர்த்தக வாகனங்களிலும் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
- 70 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், முன் எழுத்துக்கள் உயரம் 15 மி.மீட்டரிலும், அதன் தடிமன் 2.5 மி.மீட்டரிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து இரு சக்கர வாகனங்களின் பின் எழுத்துக்கள் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், இடைவெளி 5 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும்.
- 500 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களின் முன், பின் எழுத்துக்களின் உயரம் 35 மி.மீட்டரிலும், தடிமன் 7 மி.மீட்டரிலும், 5 மி.மீட்டர் இடைவெளி விட்டும் எழுத வேண்டும்.
- 500 சி.சி.க்கு அதிகமான எஞ்சின் திறன் கொண்ட 3 சக்கர வாகனங்களில் முன், பின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எழுத்துக்கள் 40 மி.மீட்டர் உயரம் கொண்டதாகவும், தடிமன் 7 மி.மீட்டரிலும் இருக்க வேண்டும். அதில் இடைவெளி 5 மி.மீட்டர் போதும்.
- இதர அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், முன், பின் நம்பர் பிளேட்டுகளில், உள்ள எழுத்துக்கள் 65 மி.மீட்டர் உயரத்திலும், தடிமன் 10 மி.மீட்டரிலும் இருக்கலாம். இடைவெளி 10 மி.மீட்டர் வேண்டும்.
- 2019 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின் புதிதாக பதிவு செய்த வாகனங்கள் அனைத்திலும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட வேண்டும்.