ஆஃப் பாயில் போட தாமதமானதால் போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலரான பாலசுப்பிரமணியன் என்பவரும், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தங்கள் நண்பர் விஜி என்பவருடன் இணைந்து நாஞ்சிபேட்டை சாலையிலுள்ள ராம்குமார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் சாப்பிடும்போது முட்டை ஆஃப் பாயில் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஃப் பாயில் கொண்டுவர காலதாமதம் ஆனதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் சப்ளை செய்து வந்த 15 வயது சிறுவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை உரிமையாளர் ராம்குமார் தலையிட்டு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மூவரும் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில், ஹோட்டல் உரிமையாளர் மனைவியின் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் காவலர் அருண்குமாருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடையை சூறையாடிய காவலர்கள் பாலசுப்பிரமணியன், அருண்குமார் மற்றும் அவரது நண்பர் விஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய எஸ்பி ரவளிபிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விஜி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.