காஞ்சிபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுர் வட்டம், ஒரகடம் பகுதியில் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக துளசிதாஸ் என்பவரும், அவருக்கு உதவியாளராக ராமு என்பவரும் பணிபுரிந்து வந்தனர். கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை மூடியை விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் துளசிதாஸையும், ராமுவையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயங்களுடன் ராமு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், இச்சம்பவத்துக்கு காரணமான நபர்களைத் துரிதமாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற தாக்குதல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு துளசிதாஸின் மனைவி சுமதிக்கு அவரின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் உரிய பணி வழங்கவும் ஆவண செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவியாளர் ராமுவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.