மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதனைத் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப் பதிவு செய்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு அமைதி காப்பது, தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.
புதிய கல்விக் கொள்கையில் அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி அ.தி.மு.க. அரசு உடனே மௌனம் கலைத்தாக வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தின் பயனாக, தமிழ்மொழி வளர்ச்சி பெற்றதுடன், தொடர்பு மொழியான ஆங்கிலம் வாயிலாகத் தமிழகத்து மாணவர்கள் இன்று உலக அளவில் பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள்.
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன? எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாரும்கூட தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா அரசு?என கேள்வி எழுப்பி உள்ளார்.