1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் 1-ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி கேட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.