தமிழக அரசால் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் நிலையில் உள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.
இதன்பின் நகைக்கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்று மக்களிடையே எதிர்பார்த்து எழுந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நகைக்கடனில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டி வந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மோசடி குறித்து ஆய்வு செய்து தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்ய உத்தரவிடப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு குடும்ப அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் திண்டுக்கல்லில் கிறித்துவ சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட மனைவி மற்றும் முதியோருக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றதில் முறைகேடு அம்பலமானதில் தள்ளுபடி செய்யப்படுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 5 சவரன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் செய்து தணிக்கை துறை மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளது.
எனவே, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் வரும் திங்கட்கிழமை முதல் நகைகள் திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.