ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின், இந்திய அணியின் டி20,ஒருநாள் கேப்டன் பொறுப்புகளிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாகத் தொடர்வார் என்றும் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியில் முதலில் டெஸ்ட் அணிக்கு அனில் கும்ப்ளே கேப்டனாகவும், ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு மட்டும் மகேந்திர சிங் தோனி கேப்டனாகவும் இருந்தார். ஆனால், தோனி கேப்டன் பதவியைத் துறந்தபின், அனைத்து பிரிவுகளுக்கும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
3 பிரிவுகளுக்கும் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டாலும் சிறிதுகூட தனது பேட்டிங்கில் தொய்வில்லாமல் பல நேரங்களில் அணிக்கு வெற்றி தேடித்தந்து, பொறுப்புள்ள கேப்டனாக இருந்து வருகிறார்.
கோலி இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு போட்டி டை ஆகவும், 2 ஆட்டங்கள் முடிவில்லாமலும் உள்ளது.
45 டி20 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள கோலி, அதில் 29 வெற்றிகளும், 19 தோல்விகளையும் கண்டுள்ளார். 2போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை. 65 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்ற கோலி, அதில் 38 வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்துள்ளார்.
3 பிரிவுகளுக்கும் கேப்டனாக இருப்பதன் சிரமம், அழுத்தம், நெருக்கடி குறித்து பலமாதங்களாக ரோஹித் சர்மாவுடனும், அணி நிர்வாகத்துடன் கோலி ஆலோசனை நடத்தி வந்தாராம். குறிப்பாக ஆஸ்திரேலிய பயணத்துக்குப்பின் கோலியின் இந்த ஆலோசனை தீவிரமடைந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் ‘ டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் மாற்றம் வரும். ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு தனியாக கேப்டன் நியமிக்கப்படுவார். ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து, கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளார்’ என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து கோலியின் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஃபார்ம் இல்லை, குறிப்பாக கடைசியாக 50 இன்னிங்ஸ்களாக கோலி ஒரு சர்வதேச சதம் கூட 3 பிரிவுகளிலும் கோலி அடிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின் கோலி இதுவரை டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. உலகத் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன் கோலியின் பேட்டிங்கிற்கு இதுபோன்ற பின்னடைவுகள், அவருக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்கு 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க இயலவில்லை. இது கோலியின் கேப்டன்ஷிப் மீதான அழுத்தத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
அதேசமயம், ரோஹித் சர்மா இந்திய அணிக்கு 10 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதில் 8 வெற்றிகளையும், 19 டி20 போட்டிகளில் 15 வெற்றிகளையும் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரோஹித்சர்மா 123போட்டிகளில் விளையாடி 74 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார், 3 முறை சாம்பியன்பட்டத்தையும் வென்று கொடுத்திருக்கிறார்




