தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி ஸ்வேதாவைக் கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்து வந்த ஸ்வேதா, நேற்று மதியம் கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது, அவரை பார்க்க ராம்சந்திரன் என்பவர் கல்லூரி அருகே காத்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசி கொண்டிருக்கையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த சமயத்தில் ராம்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவை சரமாரியாக குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். தொடர்ந்து தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ராம். இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஸ்வேதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்; ராம்சந்திரன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி இன்று (நேற்று) நான் அறிக்கை வெளியிட்ட நிலையில், தாம்பரம் தனியார் கல்லூரி மாணவி செல்வி ஸ்வேதா, இன்று (நேற்று) தாம்பரம் ரயில் நிலையம் வாயிலில் கத்தியால் பட்டப் பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற கொலைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செல்வி ஸ்வேதாவின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களாக நடந்து வந்த கொலைச் சம்பவங்களை பட்டியலிட்டிருந்தார். முதல்வர் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, மாநில சட்டம் – ஒழுங்கைச் சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Daily hunt:செய்தி அலை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்… செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.