சின்னச்சாமியின் குடும்பம் ஒரு நடுத்தரக்குடும்பம்தான். ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை. அம்மா சிவகாமி வீட்டு வேலைக்கு சென்று அவளால் முடிந்த ஒரு வருமானத்தை தன் குடும்பத்துக்கு சம்பாதித்து வந்தாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சீனிவாசன், இளையவன் பார்த்தசாரதி. இருவருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் அதனால் இருவரையும் ஒரே வகுப்பில் சேர்த்தார் சின்னச்சாமி. இரு மகன்களையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் சின்னச்சாமி. இவர்களில் பார்த்தசாரதி படிப்பில் கெட்டி.சீனிவாசன் சினிமாவில் கெட்டி. இவர்கள் வசிக்கும் பகுதி கோடம்பாக்கம் என்பதால் சீனிவாசனுக்கு சினிமா மீது அப்படி ஒரு பைத்தியம் என்று சொல்வதை விட பக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று பிளஸ் டூ ரிசல்ட் வெளியானது. பார்த்தசாரதி கையில் ரிசல்ட் பேப்பருடன் வீட்டுக்கு ஓடி வந்தான்.
‘அம்மா நான் பாசாயிட்டேன் ‘
‘ நீ பாஸ் ஆயிடுவேன்னு எங்களுக்கு தெரியும் , உங்க அண்ணன் கத என்னாச்சு’ என அம்மா ஆசையாய் கேட்க
‘அவன் நம்பர் இதுல வரலம்மா’
’வரலன்னா’
‘நம்பர் வரலன்னா அவன் ஃபெயில்ன்னு அர்த்தம்’
‘எனக்கு தெரியும் அவன் ஃபெயில் ஆயிடுவான்னு, படிக்குற புஸ்தகத்த படிடான்னா’ சினிமா பாட்டு புஸ்தகத்த படிச்சா எப்படி பா ஆக முடியும், இன்னிக்கு வரட்டும் அவன்’
என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சீனிவாசன் வீட்டுக்குள் வந்தான்
‘ரிசல்ட் பேப்பர் வாங்க உனக்கு இவ்ளோ நேரமா’
‘இல்லமா பேப்பர் எல்லா கடையிலயும் தீந்துபோச்சு அதான் மைலாப்பூர்ல போய் வாங்கிட்டு வந்தேன்’
‘அம்மா இவன் பொய் சொல்றான், பேப்பர் நம்ம அண்ணாச்சி கடை பக்கத்துல இருக்குற கடையில இருக்கு, இவன் சினிமாவுக்கு போய்ட்டு வந்துருக்கான்’
‘டேய் நான் சினிமாவுக்கு போனத நீ பாத்தியா, என்ன ஆதாரம் இருக்கு உன்கிட்ட’
‘ஆதாரம் என்கிட்ட இல்ல, உன்கிட்டதான் இருக்கு’
என்று சொல்லி ராக்கெட் வேகத்தில் பாய்ந்து சீனிவாசன் மேல் சட்டைப்பையில் இருந்த சினிமா டிக்கெட்டை எடுத்து அம்மா கையில் கொடுத்தான் பார்த்தசாரதி. அம்மா கோவத்தில் அருகில் இருந்த துடப்பத்தை எடுக்க சின்னச்சாமி கையில் ஸ்வீட் பாக்சுடன் உள்ளே வந்தார்.
‘ இங்க வாடா சாரதி’
என்று அவனை அழைத்து அவன் கன்னத்தில் தன் அழுக்கு படிந்த கையால் தட்டிக்கொடுத்து தான் வாங்கி வந்த ஸ்வீட்டை எடுத்து அவனுக்கு ஊட்டினார் சின்னச்சாமி.
‘என்னங்க இவன் பாஸ் ஆனது உங்களுக்கு எப்படி தெரியும்’
‘இவன் பாஸ் ஆயிடுவான்னு இதோ இந்த பேப்பர்காரன் போடுறதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும்டி’
’நம்ம சீனு..’ என அம்மா இழுக்க
‘அவன் ஃபெயில் ஆயிடுவான்னு அவன் பரீட்சை எழுத போகும்போதே எனக்கு தெரியும்டீ, அத பத்தி பேசி பிரயோஜனம் இல்ல, டேய் சாரதி நீ என்ன படிக்க போற?”
‘அப்பா நான் பி.காம் படிச்சுட்டு பேங்க் வேலைக்கு போலாம்னு இருகேன்’
‘டேய் சீனு, நீ என்னடா பண்ண போற’
‘நான் சினிமாவுல டைரக்ட்டர் ஆக போறேன்’ என சீனு சொல்ல அது வரை அமைதியா இருந்த சின்னச்சாமி, சிவகாமி கையில் இருந்த துடப்பத்தை வாங்கி அவனை நாலு வெளு வெளுத்தார்.
‘ஏம்பா,என்ன அடிக்குறீங்க, தம்பி அவனுக்கு புடிச்ச வேலைக்கு பேறேன்னு சொல்றான், நான் எனக்கு புடிச்ச வேலைக்கு பேறேன்னு சொல்றேன், இது தப்பா?”
‘தப்பு இல்லடா.. அவன் சொல்ற வேலைக்கு போனா நல்ல நெலமைக்கு வரலாம், நீ சொல்ற வேலைக்கு போனா நடுத்தெருவுக்குதான் வரனும், சினிமா எல்லாம் கோடியில ஒருத்தனுக்கு தான் ஜாக்பாட் அடிக்கும்’
‘அந்த கோடியில ஒருத்தனா நான் ஏன்பா இருக்க கூடாது’ என சீனு சொல்ல
‘எப்டியோ கெட்டு போடா’ என்று சலிப்புடன் சொல்லி தான் கையில் வைத்திருந்த துடப்பத்தை சிவகாமி கையில் கொடுத்து
‘இத பத்திரமா வை, வீடு பெருக்க உதவும், இவன் எதுக்கும் உதவ மாட்டான்’ என்று சொல்லி தனது அறைக்குள் சென்றார் சின்னச்சாமி.
நாட்கள் மில்லியன் வேகத்தில் நகர்ந்தன.
பார்த்தசாரதி பி.காம் பட்டப்படிப்பை முடித்தான். தான் படித்த படிப்புக்கேற்ற வேலையை தேடுவதில் ஆர்வம் காண்பித்தான். அதே சமயம் சீனிவாசன் தனது சினிமா தேடலில் மும்முரமாக இருந்தான். தினமும் காலையில் வீட்டை விட்டு சென்றால் இரவு எத்தனை மணிக்கு வருகின்றான் என்று யாருக்கும் தெரியாது. சின்னச்சாமி ஒரு முறை அவனை தண்டச்சோறு தின்கிறாய் என்று சொன்ன வார்த்தைக்காக சீனிவாசன் வீட்டில் சாப்பிடுவது இல்லை. வெளியில் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு சென்று அங்கே கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு சில சமயம் அங்கேயே தூங்கி விடுவான். இப்படியே இருவரின் தேடலும் தொடர்ந்து கொண்டு இருந்தது.
பார்த்தசாரதிக்கு அவனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம், வீட்டுக்கே வந்து கூட்டிட்டு போக கார், என ஒரு பந்தாவான வெளிநாட்டு கம்பெனி வேலை. மாசம் பத்தாயிரம் சம்பளம் என மிகவும் சந்தோசமாக பார்த்தசாரதியின் வாழ்கை ஆரம்பமானது.
சில நாட்கள் சீனிவாசனுடன் அவன் குடும்பத்தார் யாரும் பேசுவதில்லை. அன்று ஒருநாள் சிவகாமி சீனிவாசனிடம்
’டேய் சீனி உன் தம்பிக்கு பெரிய கம்பெனியில வேல கிடைச்சிருக்கு’
‘ரொம்ப சந்தோசம்’
‘நீ எப்போடா இந்த மாதிரி ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போற’
‘அது எப்போனு எனக்கு தெரியாதும்மா, ஆனா ஒரு நாள் கண்டிப்பா நடக்கும்’
‘டேய் இப்படியே சொல்லி மூனு வருசம் ஒடிப்போச்சு, இன்னமும் அந்த சினிமாவ புடிச்சுட்டு ஏண்டா இப்படி உன் வாழ்க்கைய வீணாக்குற’
‘அம்மா நான் ஒன்னும் வீணாக்குல, என்னோட கலைத்தாய்க்காக உழைச்சிட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சின்னச்சாமி உள்ளே வந்தார்.
‘ஆமா உயிரோட இருக்குற தாய்க்கு சம்பாதிச்சு போட துப்பு இல்ல, கலைத்தாய்க்காக உழைக்கிறானாம்’ என்று கோபமாக சொல்ல
‘நீங்க ரெண்டு பேரும் என்னை கைவிட்டாலும், என்னோட கலைத்தாய் என்னை கைவிட மாட்டா, உங்களுக்கு பாரமா நான் இருக்க மாட்டேன்’
என்று சொல்லி கண்களில் சிறிது கண்ணீருடன் அங்கிருந்து நகர்ந்தான் சீனிவாசன்.
சில வருடங்கள் கழிந்தது. பார்த்தசாரதிக்கு சம்பள உயர்வு கிடைத்தது. இப்போ அவனுடைய சம்பளம் இருபதாயிரத்தை நெருங்கியது. சம்பள உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் பார்த்தசாரதி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் டிரஸ் எடுத்து வந்தான். அவனது சம்பள உயர்வு பற்றி சின்னச்சாமி பெருமைப்பட்டார்.
‘எம்புள்ள என்னைவிட ரெண்டு மடங்கு அதிகமா சம்பாதிக்குறான், எனக்கு ரொம்ப சந்தோசம்டி’
‘எனக்கும் சந்தோசம்தான் ஆனா பெரியவனா நினைச்சா தான் கஷ்டமா இருக்கு’
’அந்த தண்டச்சோறு பத்தி இப்போ ஏன் பேசுற’
‘அப்பா அண்ணன் அவன் போக்கில போறான், விட்டுவிடுங்கள்’
‘அவன விட்டு ரொம்ப நாள் ஆச்சுடா பார்த்தா, நீ அடுத்து என்ன பண்ணலாம்னு கவனமா இரு, அதிக சம்பளம் குடுத்த அதுக்கு ஏத்த மாதிரி வேலையும் எதிர்ப்பாப்பாம்ங்க’
‘சரிப்பா’ என தலையாட்டிக்கொண்டே உள்ளே சென்றான் பார்த்தசாரதி.
வருடங்கள் கரைந்து ஓடின. பார்த்தசாரதிக்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மேனேஜர் பதவி கிடைத்தது, சம்பளமும் உயர்ந்தது. சின்னச்சாமி தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
”சிவகாமி நான் அந்த கல்யாண புரோக்கர் உமாபதியை பாத்துட்டு வந்துடுறேன்”
“ யாருக்கு பொண்ணு பாக்க போறீங்க?”
“ என்னடி இப்படி கேக்கேற, நம்ம சாரதிக்குத்தான் பொண்ணு பாக்க போறேன்”
” என்னங்க பெரியவன் இருக்கும்போது சின்னவனுக்கு கல்யாணம் பண்ணா ஊரு உலகம் என்ன சொல்லும்னு கொஞ்சம் நினைச்சு பாருங்க”
“போடி பொல்லாத ஊரு உலகம், அந்த உருப்படாதவன் செய்யுற வேலைக்கு அவனுக்காக இப்போ நம்ம நிலைமையில சின்னவனுக்கு செய்ய வேண்டியத செய்யாம இருக்க முடியுமா?”
‘எதுக்கும் அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு பண்ணலாமே”
“ அவன்கிட்ட என்ன கேக்கணும், கல்யாணம் எல்லாம் அவனுக்கு ஒத்து வராது , சினிமா சினிமான்னு சுத்துறான். இவனுக்கு யார் பொண்ணு குடுப்பா, எதாச்சும் கேட்டா ‘ எனக்கு கலைத்தாய் இருக்கானு” திமிரா பதில் சொல்வான், நான் போய் புரோக்கர பாத்துட்டு வரேன்”
சின்னச்சாமி பார்த்தசாரதிக்கு எப்படியும் திருமணம் செய்து வைத்து விட மும்முரமாக வேலை பார்த்தார். தம்பி கல்யாணம் விஷயம் சீனிவாசனுக்கு அவனது தாய் சிவகாமி மூலம் கிடைத்தது. ஒருநாள் சிவகாமி சீனிவாசனிடம்
“ டேய் சீனு நாளைக்கு உன் தம்பிய மாப்பிள்ளை பாக்க பொண்ணு வீட்ல இருந்து வராங்க, நாளைக்கு சாயந்தரம் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாடா”
“அம்மா அவன மாப்பிள்ளை பாக்க வராங்க நான் என்ன பண்ண போறேன். இன்னிக்கு முக்கியமான ஒரு நடிகருக்கு கதை சொல்லனும், என்னால வர முடியாதும்மா”
“டேய் இப்படியே நீ சுத்திட்டு இருந்தா, உனக்கு ஒரு கல்யாணம் காட்சி யாருடா பண்ணி வைப்பாங்க”
“ அதெல்லாம் என் கலைத்தாய் பாத்துப்பா. நீங்க எதுவும் கஷ்டப்பட வேண்டாம்”
என்று சொல்லும்போது சின்னச்சாமி உள்ளே வந்தார். சீனு அவரை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சிவகாமிய பார்த்து
“நான் அப்பவே சொன்னேன் நீ கேக்கல, இப்ப பாத்தியா அவன் பேசிட்டு போறத”
சிவகாமி பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
பார்த்தசாரதிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. அவனது மனைவியும் வேலைக்கு செல்வதால் பார்த்தசாரதியின் பொருளாதார நிலை கொஞ்சம் உயர்ந்தது.
சீனிவாசன் எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்று பல சினிமா கம்பெனிகள் மற்றும் பல நடிகர்களின் வீட்டுக்கதவுகளை தட்டி வந்தான். கிட்டதட்ட அவனது சினிமா தேடல் பதினெட்டு வருடங்களை கடந்தது.
சிவகாமிக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போனது. சின்னச்சாமி சீனிவாசனிடம்
“டேய் சீனு, உங்கம்பா உடம்பு ரொம்ப முடியாம இருக்கு, உன் கல்யாணத்த பாக்கனும்னு ஆசப்படுறா, உனக்கு 18 வருசம் சினிமாவுக்காக குடுத்தாச்சு, உன் சினிமா ஆச நிறைவேறல, உங்கம்மா ஆசையாவது நீ நிறைவேத்த கூடாதா? ஊர்ல உங்க மாமா பொண்ணு இருக்கா, அவ உன்ன கட்டிக்க சம்மதம் சொல்லி இருக்கா, நீ உன் பதில சொல்லு”
“அப்பா நான் சினிமாவுல ஜெயிச்ச பின்னாடி தான் எல்லாமே, அம்மாவுக்கு உடம்பு சரியில்லனா ஹாஸ்பிட்டல்ல சேருங்க, நான் கல்யாணம் பண்ணிட்டா அவுங்க உடம்பு சரியாகிடாது”
“டேய் உன் மனசுல கொஞ்சம் கூட பாசம் இல்லடா, சினிமாவுக்காக பெத்தவங்கள கஷ்டப்படுத்துற”
“நான் அப்படி நினைக்கல, நீங்க எனக்கு எப்படி முக்கியமோ அது மாதிரிதான் சினிமாவும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அன்று மாலை சீனிவாசன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
“அம்மா கலைத்தாய் என்னை கைவிடல, எனக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைச்சுடுச்சு அதுவும் ஒரு பெரிய நடிகரோட படத்த டைரக்ட் பண்ண போறேன், என்னை ஆசிர்வாதம் பண்ணும்மா“ என்றான்..சிவகாமியின் வார்த்தைகள் கண்களில் கண்ணீராக வந்தது. சின்னச்சாமியும் மகிழ்ச்சி கலந்த கலக்கத்தில் நின்றார்.
சீனிவாசன் எடுத்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்த படத்துக்கு அவனை மிகப்பெரிய தயாரிப்பாளர் படம் பண்ண அழைத்தார். அவனுக்கு சம்பளமாக ஒரு கோடி ரூபாய் தரப்பட்டது.
6 மாதத்தில் சீனிவாசனின் வாழ்க்கை முறை மாறியது. கார் வாங்கினான். வீடு வாங்கினான். சிவகாமியை நல்ல பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து குணமாக்கினான். வாடகை வீட்டில் இருந்த அனைவரையும் சொந்த வீட்டுக்கு அழைத்து சென்றான் சீனிவாசன். புதுவீட்டில் சீனிவாசன் சின்னச்சாமியிடம்
“அப்பா நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கட்டுமா?”
“ம்ம்..கேளுப்பா”
“இதுவரை தம்பி வேலைக்கு போய் மொத்தம் எவ்வளவு சம்பாதித்து இருப்பான், சேமிப்பு எவ்ளோ இருக்கும்”
” அது ஏண்டா இப்போ கேக்குற “
“ என்ன பதினெட்டு வருசத்துல ஒரு 50 லட்சம் சம்பாதித்து இருப்பான், அவன் கையில எவ்ளோ இருக்குன்னு சரியா தெரியல எப்படியும் ஒரு 5 லட்சமாவது இருக்கும்”
‘ம்ம்..அதே பதினெட்டு வருசம் நான் கஷ்டப்பட்டேன் இப்போ நான் அவன விட ரெண்டு மடங்கு அதிகம் சம்பாதிச்சு இருக்கேன், நான் இவ்வளவு நாள் டைம் வேஸ்ட் பண்ணல என் சம்பளத்துக்கான அடித்தளத்தை போட்டுட்டு இருந்தேன். நான் அவன குறை சொல்லல, அதே சமயம் யென்ன மாதிரி அவுங்களுக்கு புடிச்ச துறையில ஜெயிக்க வேணும்னா, கொஞ்சம் டைம் வேணும், அதுக்கு நாம காத்திருக்கனும். நான் காத்திருந்தேன். அதே சமயம் ஒரே குறிக்கோளோட உழைச்சேன். இப்போ நான் அடிக்கடி சொல்ற மாதிரி, கலைத்தாய் யென்ன கைவிடல” என்று சொல்லி முடித்தான் சீனு.
அங்கு நின்று இருந்த அனைவரும் சீனு டைரக்ட் பண்ணி வெற்றி பெற்ற போஸ்டரை பார்த்தனர். அதில் படத்தின் பெயர் “ வருஷம் 18” என்று இருந்தது.
********************