ராவணன் தூங்கிக்கொண்டு இருந்த போது அவன் போன் பூதாகரமாக அடித்தது, திடுக்கிட்டு எழுந்தவன் போனை எடுத்தான். போனில் முருகன்
“டேய் எங்க இருக்க” முருகனின் பேச்சில் ஒரு பதற்றம் இருந்தது.
“வீட்டுல”
“வீட்டுக்கு வாடா”
போனை வைத்துவிட்டார்,
ராவணன் அவசர அவசரமாக எழுந்து சேரில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டினான், என்னவா இருக்கும் குரலில் இவ்ளோ பதற்றம், இப்படி எப்பவுமே கூப்பிட மாட்டாரே என யோசித்துகொண்டே சட்டையை மாட்டினான்.
இரண்டு நாட்களாக பக்கத்து வீட்டில் ஒரு கிழவி உயிர் இழுத்துகொண்டு கிடந்தது அதுக்கு ரொம்ப முடியாம இருக்குமோ, இல்ல வேற யாருக்காவது ஏதாவது இருக்குமோ
அவனின் மனது என்ன என்னமோ யோசித்தது.
முருகன் வீட்டிற்கு சென்றான், முருகன் வீட்டிற்கு முன் கூட்டமாக இருந்தது, வீட்டிற்கு முன் தனியாக மூன்று நான்கு பெண்களாக நின்னு ரகசியம் போல பேசிக்கொண்டு இருந்தனர்.
“மத்தியானத்தில் இருந்துதான்” முருகன் மனைவி யாரிடமோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“நீ எங்க போனவ”
யாரோ கேட்க
“வீட்டுக்குளள தான் படுத்திருந்தேன்”
ராவணனுக்கு ஒண்ணுமே புரியவில்லை.
“அவரு எங்க” முருகன் மனைவி கீதாவிடம் கேட்டான்.
“தெக்க போயிருக்காரு, நீ போகலையா கூட”
“என்ன ஆச்சு”
“தாத்தாவ காணோம்டா”
“எங்க போனாரு”
“அதுதான் தெரில, வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்தோம் அவரு பழைய வீட்டுல படுத்துருந்தாரு மதியத்துல இருந்து ஆளவே காணோம்”
அவளுக்கு கண் கலங்கியது சேலையை எடுத்து கண்ணை துடைத்து கண்ணீர் வராமல் தடுத்தாள்.
“நீங்க ஏதாவது பேசுனீங்களா அவர” அருகில் இருந்து கேட்டாள் பக்கத்து வீட்டு பொன்னம்மா.
“அவர யாரு பேசுறாங்க, பேசுனாலும் அவருக்கு கேட்கவா போகுது”
“ஆமாடி அவருக்கு காதும் கேட்காது” கையை திருப்பி தாடையில் வைத்துகொண்டாள்.
முருகனுக்கு பேசலாம்னு போனை கையில் எடுத்தான் ராவணன், முகம் எல்லாம் வாடிப்போய் வண்டியில் வந்தார் பின்னால் ஒருவனை ஏற்றிக்கொண்டு.
வண்டியை நிறுத்திய முருகனை பெண்களும் வீட்டின் முன் நின்னுருந்த சிலரும் சூழ்ந்து கொண்டனர்.
“சாமி என்ன ஆச்சு”
“எங்க போய் பார்த்த”
“ஏதும் துப்பு கெடச்சுச்சா”
“மேக்க போய் பார்த்தையா”
கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொன்னா கேட்க, கூட்டத்திற்குள் இருந்து ராவணனை கூப்பிட்டார்.
“ஒரு போஸ்டர் மாதிரி காணவில்லைனு போட்டு எல்லாருக்கும் அனுப்பிவிடு, அவங்கள எல்லாருக்கும் அனுப்ப சொல்லு” ராவணனிடம் சொல்லிவிட்டு “ஹே அவரு போட்டோ இருந்தா எடுத்துக்கொடு”ன்னு கீதாவிடம் சொன்னார்.
“அவரு போட்டோ எங்க இருக்கு” கேட்டுட்டு இடத்தை விட்டு நகராமல் நின்னாள்.
“போடி போய் தேடிப்பாரு” கோவத்தில் கத்தினார்.
“ஏதாவது பேங்க பாஸ்புக், நூறு நாள் வேலை அட்டைல இருந்தா கிழுச்சு கொண்டு வா” ராவணன் சொல்ல வீட்டுக்குள் போனாள் கீதா.
“எப்படி” முருகனிடம் கேட்டான் ராவணன். சில பெண்களும் ஆண்களும் முருகனை சூழ்ந்து கொண்டனர்.
“மதியம் சப்புடலாம்னு உக்காந்தேன், கீதாகிட்ட அவரு சாப்டாரன்னு கேட்டேன் காலைல இருந்தே ஆளக்காணோம் னு சொன்னா” முருகன் கண் கலங்கியது.
“பழைய வீட்டுல தான் எப்பவுமே படுத்துருப்பாரு வந்து பாக்க அளவே காணோம், காலைல போட்டு கொடுத்த சாப்பாடு அப்படியே இருக்கு”
“தம்பி அக்கா வீட்டுக்கு போன் போட்டு கேளு அங்க கீது வந்தாரான்னு” கூட்டத்தில் யாரோ சொல்ல.
“ஆமாம் கேளுங்க” என்பது போல தலையை ஆட்டினான் ராவணன்.
முருகன் போனை எடுத்து தனியாக போய் பேசினார், மீண்டும் வேற யாருக்கோ பேசினார்.
“அங்க வரலைன்னு சொல்லுறாங்க, அவரா எல்லாம் போகமாட்டரு அவருக்கு பஸ் எப்டி தெரியும், போகணும்னு சொன்னா நான்தான் கொண்டு போய் விடுவேன்”
“தோப்புக்கு பக்கம் ஏதும் காத்தாட போய் உட்காந்துருக்க போறாரு பாருங்க” பசங்க சொல்ல சில ஆண்கள் போய் தேடப்போனார்கள்.
“ஆமாப்பா வயசான நெதானம் இல்லாம போயிரும் அவரை சொல்லியும் குத்தமில்ல, இப்படிதான் ஒரு நாலு மாசம் முன்ன காலனில காலைல மூணு மணிக்கு போய் கெனத்து மேட்டுல சுத்திட்டு இருந்துருகாரு அந்த பக்கம் போனவங்க கேட்க ஆடு வந்துருச்சு அதுதான் பாக்க வந்தேன்னு சொல்ல இந்த டைம்ல எந்த ஆடு வருது போப்பான்னு அங்க இருந்தவங்க கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு போயிருக்காங்க”
நாகம்மாள் சொன்னதை காதுகொடுத்து கேட்டார்கள் சிலர்,
“வயசு ஆகிட்ட கொழந்தை மாதிரி ஆகிருவாங்க எல்லாருமே இவருக்கும் எழுவது என்பது வயசு ஆகுதல்ல” மணி சொல்ல, ஆமாம் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினார்கள் சிலர்.
“சரி வாங்க இன்னொருவாட்டி போய் பாக்கலாம் வேற பக்கம்” வண்டியை ஸ்டார்ட் செய்து ராவணன் கூப்பிட வண்டியில் ஏறினார் முருகன்.
“பஸ் ஸ்டான்ட் பக்கம் போய் பாருங்க எங்காது போலாம்னு போயிருந்தா பஸ்க்கு நிக்கலாமல்ல” கூட்டத்தில் இருந்து சொல்ல.
வண்டியை வேகமாக ஓட்டினான் ராவணன், “மெதுவாவே போடா, வழில எங்காவது போய்ட்டு இருந்தா பாக்கலாம்” முருகன் சொல்ல வண்டியை மெதுவாக ஓட்டினான்.
பஸ் ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி, எல்லா இடமும் சுத்தி அடித்தனர், முருகன் வண்டியை ஓட்ட ராவணன் போனில் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து காணவில்லை என்று தெரிந்தவர்களுக்கு எல்லாம் தேடிபார்க்க சொல்லி அனுப்பிக்கொண்டு இருந்தான்.
பகல் மறைந்து இரவு ஆகியது, ரோட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது தை பூசம் கூட்டம். யாராவது எங்காவது கூட்டமாக நின்னிருந்தாள் உடனே ஏறங்கி போய் தேடினார்கள்,
“வயசான காலத்துல சோறத் நின்னுட்டு வீட்டுல இருக்காம” வண்டியை ஓட்டிட்டே புலம்பினார் முருகன்.
“போன டைம் ஆயக்குடி போறேன்னு மானூர் ல போய் வயலுக்கு போற வழில போயிட்டு இருந்துருக்காரு அங்க தெருஞ்சவங்க ஒருத்தர் போன் பண்ணி சொல்ல போய் கூப்பிட்டு வந்தேன்” முருகன் சொல்ல போன் அடித்தது.
“இருந்தாரா ” கீதா கேட்டாள் “இன்னும் இல்ல வை” போனை வைத்துவிட்டார்.
இரவு பதினொன்று ஆனது மணி.
தேடிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட்டில் நின்னுருக்க வேற வண்டியில் தேடிகொண்டிருந்த அசோக் வர
“என்னாச்சு எங்காது கண்ணுல கெடச்சாரா” அசோக் கேட்க இல்லை என்பது போல உதட்டை மட்டும் பிதுக்கினார்.
“சரி வாங்க வீட்டுக்கு போலாம்” முருகன் சொல்ல “இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு போலாம்” ராவணன் சொல்ல
“இவ்ளோ நேரம் தேடியாச்சு எங்கயும் காணோம், அதுதான் எல்லாருக்கும் அனுப்பிருக்கமல்ல யாராவது பார்த்து சொல்லுவாங்க அப்படி சொல்லலைன்னா காலைல ஸ்டேசன் போய் கம்பிளைன்ட் பண்ணிறலாம்”
“ஆமாம் அதுதான் கரெக்ட்” ராவணன் சொன்னான்.
வீட்டிக்கு வர வீட்டில் கூட்டம் இல்லை, கீதா மட்டும் வீட்டு முன்னாடி உட்காந்து இருந்தாள்.
“என்ன தம்பி ஆச்சு” ராவணனிடம் கேட்டாள். அவன் காணோம் என்பது போல கையை மட்டும் ஆட்டினான்.
காலையில் எழுந்து முருகன் வீட்டுக்கு வந்தான் ராவணன், கீதா மட்டும் இருந்தால் “எங்க காணோம்” என்றான்
“நாலு மணிக்கே எந்துருச்சு போயிட்டாரு தேடிபாக்குரன்னு, நைட் எல்லாம் கண்ணுக்கு தூக்கம் இல்ல” அடுப்பை பற்ற வைத்து சட்டியை எடுத்து வைத்தாள்.
“கம்பிளைன்ட் கொடுக்க போறீங்களா என்றாள் ”
“ஆமாம் அப்புறம் என்ன பண்ண, போலீஸ் ஆவது தேடுவாங்க”
“இவரு சும்மா வீட்டுல இருக்காம எங்காவது இதே மாதிரி அடிக்கடி போயிறது, பாத்துக்க மாட்டையான்னு உங்க மாமன் என்னைய சடைரது, கொழந்தையா ” என்று முகத்தை சுளித்தால் கீதா.
“வயசாகிட்டா எல்லாருமே அப்படித்தான் நாளைக்கு நீயும் அப்படித்தான் நானும் அப்படித்தான் எலாருமே அப்படிதான்”
கீதாவிடம் ராவணன் பேசிகொண்டு இருக்க முருகன் வந்துவிட்டார், “பார்த்தேங்களா” ராவணன் கேட்க “எங்கயும் காணோம்” தண்ணியை எடுத்து முகத்தை கழுவினார்.
“வாடா கொளத்து வரைக்கும் போய் பார்துட்டு வரலாம், அங்கிட்டுதான் இப்போ போனாருன்னு பூவக்கா போன் பண்ணுச்சு” சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே வீட்டுக்குள் வந்தாள் பக்கத்து வீட்டு பொன்னம்மாள்.
“ஹே அவளே பயங்கர பொய்காரி சும்மா ஏதாவது சொல்லுவா பைத்தியம்” என்றாள்.
முருகனின் அக்கா, அவளின் வீட்டுக்காரர் எல்லாமே வந்துவிட்டனர், அங்கயும் வரல என்று சொல்லிட்டு இருக்க இருக்க
“ஒரு வாட்டி போய் பாக்கலாம் வா” என்று ராவணனை அழைத்துகொண்டு போனார், குளம் குளத்துக்கு அந்த பக்கம் எல்லாம் தேடினார்கள் எங்கயுமே காணோம்.
திரும்பி வீட்டுக்கு வர பதினொறு மணி பஸ்ஸில் வந்து இறங்கினார் தாத்தா. முகம் வாடி கிடந்தது, தூக்கம் இல்லாமல் கண்கள் சிவந்து இருந்தது.
பெண்கள் சூந்துகொண்டு கேட்க நிற்காமல் நடந்தார் வீட்டுக்கு , “எங்க போன இங்க எல்லாரும் கதறிட்டு இருக்காங்க” பொன்னம்மாள் கூற
“புள்ளையா பாக்க போயிருந்தேன் ” மெதுவாக சொன்னார்.
“புள்ளையே இங்க இருக்கு நீ எங்க போனையாம”
பொன்னம்மாள் கேட்பதற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டார், போய் செம்பை எடுத்து தண்ணீர் குடித்தார்.
அருகில் நின்னுருந்த முருகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது, கடைசி வரை அவர் எங்க போனார் என்று அவரும் சொல்லவில்லை முருகனும் கேட்கவில்லை
*******************