அது சிறார் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம். அதன் நடுவராக, மேசைக்குப் பின்னால் நாற்காலியில் அமர்ந்திருந்த அமுதாவிற்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். மாநிறத்தில் நல்ல பொலிவானத் தோற்றம். அன்றைய வழக்குகளை விசாரிக்க அனுமதி தந்தாள்.
கைவிலங்கிடப்பட்ட ஒரு சிறுவனோடு உள்ளே வந்த தலைமைக்காவலர், ஒரு காவலர் இருவரும் மேம்போக்கான ஒரு வணக்கத்தை வைத்ததில், பொம்பளைத்தானே என்ற அலட்சியம் இருந்ததை உணர்ந்த அமுதா, அந்த மூவரையும் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
“உங்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா?” என்றதும், இருகாவலர்களும் தாக்கப்பட்டவர்களைப்போல நிமிர்ந்தனர். என்னவாயிருக்கும்? என்பதைப்போல ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
“கோர்ட் காம்ப்பசுக்குள்ள வந்துட்டீங்கன்னா, அதுக்கான விதிமுறைகளை நீங்க பின்பற்றியே ஆகணும்கிறது தெரியாதா? உங்களுக்கெல்லாம் அடிக்கடி மறந்திடுமா? ஒவ்வொரு முறையும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா? குற்றம் சாட்டப்பட்டவங்களை நீதிமன்றத்துக்குள்ளே நிறுத்தும்போது கைவிலங்கை கழட்டிட்டுத்தான் உள்ளே அழைச்சிட்டு வரணும்கிறது தெரியாதா? எத்தனை வருசம் சர்வீசுல இருக்கிறீங்க? டூ இட் நவ்.” என்று உத்தரவிட்டதும்,
“ஐயம் சாரி மேடம், இனிமே வருங்காலங்களில் இது மாதிரி நடக்காமப் பார்த்துக்கிறோம்” என்று பணிவாகப் பதறிய தலைமைக் காவலர் உடனடியாக பையனின் கைவிலங்கை ஒருபக்கம் கழற்றி விட்டார்.
அவர்கள் நின்றபடி நடுவர் அமுதாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் குற்றத்தகவல் அறிக்கையை நிதானமாக கவனமுடன் வாசித்துக் கொண்டிருந்தாள். அங்கே இருந்த அரையிருட்டு அமைதியில், தலைக்கு மேலே சுற்றிக்கொண்டிருந்த ஆதிகாலத்து தடிமனான மின்விசிறி தடக் தடக்கென்று அதிக சத்தம் போட்டது. வாசித்து முடித்ததும் அவள் விட்ட மூச்சுக்கூட தெளிவாகக் கேட்டது.
சிறுவனை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். இன்னொரு கையில் கழட்டப்படாத நிலையில் இருந்த விலங்கைப் பார்த்ததும் கோபம் வந்தது. “இன்னொன்றையும் கழட்ட முடியலையா?”என்று கேட்டவுடன்,
தலைமைக்காவலர் பணிவுடன், “மேடம், பையன் பொசுக்குன்னு ஓடிப்போயிட்டா துரத்திப்பிடிக்க முடியாது மேடம், அதான்.” என்று சொன்னவுடன், காவலரின் வயிற்றைப் பார்த்தாள். அது துருத்தியபடித் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்தது.
“முதல்ல நான் சொன்னதை செய்யுங்க சார். இன்னொரு விலங்கையும் கழட்டுங்க. என்னத்தான் போலீசுல டிரெய்னிங் எடுத்தீங்களோ?” என்றவுடன் அடுத்தக் கையின் விலங்கும் கழட்டப்பட்டது.
அமுதா அந்த சிறுவனைப் பார்த்தாள். அழுக்காய் உயிரற்ற ஓவியம் போல நின்றிருந்தான். சிறைவாசத்திற்கு தயாராய் வந்தவனைப் போல கையில் சின்ன துணிமூட்டை. சலனமில்லாமல் உணர்ச்சியற்றப் பார்வையோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்கும்போது அவளுக்கு அனுதாபமே மேலோங்கியது. அவனது முகத்தை ஆராய்ந்தாள். கண்கள் நிறைய சொல்லுவது போல இருந்தன. ஊடுருவிப் பார்க்கும் நேரானப் பார்வை. அதில் பாசத்துக்கான ஏக்கம், எதுவும் கிடைக்காத வெறுப்பு, போராடத் தெரியாத அறியாமை, யாரையும் நம்ப விரும்பாத இறுக்கம், எதற்கும் அஞ்சாத துணிச்சல்.
அடேயப்பா, இந்த சின்ன மலர்க்கண்களில் இத்தனையுமா? அல்லது இது தனக்குள் உருவாகிற வெறும் கற்பனையா? விழியின் கடையோரம் என்ன பளபளப்பு? ஈரமா? இல்லை, அவன் அழத்தயாரில்லை என்பதை இறுகிய முகமே காட்டுகிறது. மொத்தத்தில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவனைப் போலவே நிற்கிறான். நானென்ன நீதிபதியா? அல்லது மனநலமருத்துவரா? சட்டென்று உயிர் பெற்றவளைப் போல சுயநினைவுக்கு வந்தாள்.
தலைமைக்காவலரைப் பார்த்து, “என்ன கேஸ்?” என்று வினவ, அவர் மேசை மீது பரப்பிக்கிடந்த குற்றத்தகவல் அறிக்கை மீது தன் பார்வையை செலுத்திவிட்டு, அலுப்பைக் காட்டிக்கொள்ளாதவராக, வழக்கை விவரித்தார்.
“மேடம், வீட்டுல தண்ணீர் இறைக்கிற மோட்டாரைத் திருடிட்டான் இவன்.”
“எங்கே?”
“சொந்த வீட்டுலயே”
“சொந்த வீட்டுலேயா?
“சொந்த வீடுன்னா, சொந்தக்காரங்க வீடுங்க மேடம்.”
“ம், சொல்லுங்க”
“இன்ஸ்பெக்டரய்யா நேத்து நைட் ரவுண்ட்ஸ் போறப்ப கையும் களவுமாக பிடிச்சாருங்க. இந்த பையன் மோட்டாரை சைக்கிள்ல பின்பக்கமா வச்சி தள்ளிக்கிட்டு வரும்போது, அய்யா பார்த்து விசாரிச்சிருக்காருங்க. பையன் முன்னுக்கு பின்னா பதில் சொன்னதால, ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாருங்க. நல்லா விசாரிச்சதுல பையன் மோட்டார் திருடியதை ஒத்துக்கிட்டானுங்க. வீட்டு அட்ரசுக்கு போய் விசாரிச்சப்போ தூரத்துத் தாய்மாமன் வீட்டுலத்தான் திருடியிருக்கிறான்னு தெரிய வந்ததுங்க.”
“யாரு கம்ப்ளைன்ட் பண்ணினது?”
“அவனோட மாமாக்கிட்டேயே கம்ப்ளைன்ட் வாங்கியிருக்கிறோம் மேடம்.”
“அப்பக்கூட நீங்களேதான் அவருகிட்ட கம்ப்ளைன்ட் கேட்டு வாங்கியிருக்கிறீங்க. அப்படித்தானே?”
தலைமைக் காவலர் தடுமாற்றமடைந்தார். ” இல்லை மேடம்.”
“வீட்டுக்குப் போயிதானே விசாரிச்சீங்க? கம்ப்ளைன்ட் வாங்குனீங்க?”
“வீட்டுக்குப் போயி விசாரணை பண்ணினோம்ங்க. அப்புறம், இந்த பையனோட மாமாவே மோட்டார் காணோம்னு அவராவேதான் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தாருங்க.”
“அப்படியா? அப்போ அந்த எவிடன்ஸ் எல்லாம் எங்கேயிருக்கு? திருடியதா சொல்லப்பட்ட மோட்டார், அப்புறம் அந்த சைக்கிள்?”
தலைமைக் காவலர் அவசரமாக, ” இருக்குதுங்க மேடம். உடனே கொண்டு வர்றோம்” என்றார்.
“ஒகே. அந்த எவிடன்சை இப்பவே கொண்டுவந்து காட்டுங்க. இன்ஸ்பெக்டர் எங்கே? ” என்றதும் தலைமைக் காவலர் முகத்தில் தயக்கம் காட்டினார். அதை புரிந்துகொண்ட நடுவர் அமுதா, என்ன? என்பதைப் போல பார்க்க,
“மேடம், இன்ஸ்பெக்டரய்யா சிஎம் புரோக்ராம் விசயமா கமிஷ்னர் மீட்டிங்குல இருக்கிறாரு. எப்ப வருவாருன்னு சொல்ல முடியலைங்க மேடம், அதான்” என்று இழுக்க,
“அப்படியா? நான் மத்த கேசுங்களைப் பார்க்க வேண்டியிருக்குது. அவர் வர்ற வரைக்கும் நீங்க இங்கேயே நில்லுங்க.” என்று சொல்லவும் அவர் பதட்டமானார்.
“சாரி மேடம், நான் இப்பவே அய்யாகிட்டே கேட்டுச் சொல்றேங்க” என்றபடி அலைபேசியை எடுத்துக்கொண்டு பணிவாக வெளியேறினார். தொடர்பு கொண்டபோது மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, “சரிங்கய்யா, சரிங்கைய்யா” என்று யாருக்கும் கேட்காத குரலில் சொல்லிவிட்டு திரும்பி உள்ளே வந்தார்.
“மேடம், இன்ஸ்பெக்டரய்யா இன்னும் கொஞ்சநேரத்துல இங்கே வந்துடுவாருங்க” என்றார்.
“சரி, வரட்டும்” என்றபடி அமுதா, பையனை அருகில் அழைத்து, “உன் பேரன்ன?” என்று மென்மை கலந்த கண்டிப்பானக் குரலில் கேட்டதும், பையன் முதல் முறையாக வாய் திறந்து அவனுக்கே கேட்காதக் குரலில்,
“என் பேரு குமாரு” என்றான்.
“அப்பா அம்மா எங்கே இருக்காங்க?”
“ரெண்டு பேருமே ஆக்சிடென்டுல செத்துப் போயிட்டதா மாமா சொன்னாரு.”
“எப்போ?”
“நான் சின்னப் புள்ளையா இருக்கிறப்போ.”
“இப்ப உனக்கு என்ன வயசாகுது?”
“பதிமூணு.”
“யார்கூட இருக்கே?”
“என் மாமா வீட்ல இருக்கேன்.”
வியப்பானாள். “மாமா வீட்லேயா? அப்புறம் ஏன் மோட்டாரை எடுத்தே?” திருடு என்ற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்தாள்.
அவன் பேசாமலிருந்தான்.
அவளே தொடர்ந்தாள். “எந்த வகுப்பு படிக்கிறே? எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிறே?”
“எங்க மாமா என்னை வீட்டுலேயிருந்தே படிக்கச் சொல்லிட்டாரு. வினுதான் பள்ளிக்கூடம் போறான்.”
“அது யாரு வினு?”
“என் மாமா பையன்.”
“அவன் எந்த வகுப்பு படிக்கிறான்?”
“பத்தாம் வகுப்பு படிக்கிறான்.”
“எந்த பள்ளிக்கூடம்?”
அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. “பெரிய பள்ளிக்கூடத்துக்கு போறான். இங்கிலீசுலக்கூட பேசுவான்.”
“அப்படியா? உன் மாமா வீட்டுல யாரெல்லாம் இருக்கிறாங்க?”
“நானு, மாமா, அத்தை, வினு, அப்புறம் பாப்பா தனுசா.”
“தனுசாவா? அவ யாரு? என்ன படிக்கிறா?”
“எங்க மாமா பொண்ணு. ரெண்டாப்பு படிக்கிறா.”
அதற்குள் தலைமைக் காவலர் குறுக்கிட்டார். “மேடம், இந்த பையனோட மாமா ஆளுங்கட்சியில ஒன்றியத் தலைவரா இருக்கிறாருங்க” என்று பரபரப்பாகச் சொல்ல, அமுதா அவரை நிதானமாக ஏறெடுத்துப் பார்த்து விட்டு, “சரி, இருந்துக்கட்டும். அதுக்கென்ன இப்போ?” என்றாள்.
மூக்குடைப்பட்டவராக, “இல்லை, சும்மா சொன்னேங்க மேடம்” என அசடு வழிந்தார்.
அமுதா பையனிடம் திரும்பி விசாரித்தாள். “உனக்கு சாப்பாடு, துணி எல்லாம் யாரு குடுக்கிறா?”
“மாமாவும் அத்தையும் தான்.”
“சரி, அப்புறம் எதுக்காக மாமா வீட்டு மோட்டாரை எடுத்தே?”
அவன் பேசாமலிருந்தான்.
“நீ யாருக்கும் பயப்படாதே. உண்மையை மட்டும் சொல்லு. நீதான் மோட்டாரை எடுத்துட்டுப் போனீயா?”
அவன் சிறிது மவுனத்துக்குப் பிறகு, “ஆமாங்க, நான்தான் மோட்டாரை எடுத்துட்டுப் போனேன்” என்று உறுதியான முகப்பாவனையோடு சொன்னதும், அமுதாவுக்கு காரணம் புரியாமல் கோபம் துளிர்த்தது.
“சரி, நீ எத்தனை வரை படிச்சிருக்கே?” எனக் கேட்டாள்.
“நான் நாலாப்பு வரைதான் படிச்சேன். இப்போ நான் ஏழாப்பு போவணும்.”
“நீ ஏன் ஸ்கூலுக்குப்போயி படிக்கலை? தப்புச்செஞ்சா ஜெயில்ல போட்டுடுவாங்க தெரியுமா?”
“செயிலுக்கு போனா, படிப்பெல்லாம் சொல்லித்தருவாங்க. டிராயிங்கெல்லாம் வரையக் கத்துக்குடுப்பாங்க. ஆமான்னு ஒத்துக்கோ. அப்பத்தான் செயில் பள்ளிக்கூடத்துலச் சேத்துப்பாங்கன்னு மாமா சொன்னாங்க என்றதும் அமுதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிரிப்பதா வருந்துவதா எனத் தெரியவில்லை. அவள் மனதுக்குள் எதுவோ உறுத்திற்று. யோசனையோடு தனக்குத்தானே தலையசைத்துக் கொண்டாள்.
பையன் கேட்டான், “இப்போ என்னை ஏழாப்பு சேத்துப்பாங்களாக்கா?”
அவனை உற்றுப்பார்த்தபடி, “அக்கான்னு சொல்லக்கூடாது. அம்மான்னு சொல்லணும்” எனத் திருத்தினாள்.
“சரிங்கம்மா” என்றபடி பணிவாக தன் கைகளைக் கட்டிக்கொண்டான் பையன்.
“பார்த்தீங்களா மேடம். உங்ககிட்டேயே இந்த பேச்சுப் பேசறான். இந்த மாதிரி பசங்களை எல்லாம் வெளியே விடாம, உள்ளே வச்சித் திருத்தணும் மேடம்” என்ற தலைமைக்காவலரை ஏறிட்டாள் அமுதா.
எதையும் கேட்காமல், வந்த உடனேயே கையெழுத்துப் போட்டு ரிமாண்ட் பண்றது மட்டுந்தானா ஒரு நடுவரோட வேலை? என மனதுக்குள் கேட்டுக்கொண்டவளாக, “பையன் கேட்டக் கேள்விக்குத்தானே பதில் சொல்றான். இன்னும் எல்லாமே பேசப்போறான். உங்க இன்ஸ்பெக்ரய்யா வந்துடட்டும், தெரிஞ்சிடும் கொஞ்சநேரத்துல எல்லாமே” என்றாள்.
அதில் இருந்த அழுத்தத்தை உணர்ந்த இருகாவலர்களும் சங்கடமாக உணர்ந்தனர். அவர்களை தனியாக நிற்கச் சொல்லிவிட்டு, இடையில் மற்ற வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அரைமணி நேரத்தில் . ஆய்வாளரும் ஜீப்பிலிருந்து வந்திறங்கினார். உள்ளே வந்தவுடன் வணக்கம் வைத்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார், இந்த கேசை எங்கே, எப்போ, எந்த நிலையில புடிச்சீங்க?”
“மேடம், நான் நேத்து நைட் ரவுண்ட்ஸ்ல இருந்தேன். அப்ப சங்கர்நகர் பக்கம் போறப்போ சுமார் ஒரு ஒண்ணரை மணியிருக்கும். மிட்நைட்ல தூங்கிக்கிட்டு இருக்கவேண்டிய ஒரு சின்னபையன், போர்வெல் மோட்டாரை சைக்கிள்ல வச்சி, தள்ளிக்கிட்டு வரும்போது எனக்கு சந்தேகமாயிடுச்சி. நிறுத்தி விசாரிச்சப்போ, முன்னுக்கு பின்னா பதில் சொன்னான். அதனால ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டோம். அங்க வச்சி விசாரிச்சப்போ தன்னுடைய மாமா வீட்லேர்ந்து மோட்டாரை திருடியதை ஒத்துக்கிட்டான். அப்புறம் அட்ரஸ் தெரிஞ்சிக்கிட்டு போய் விசாரிச்சோம். அவரு கரண்ட் பாலிக்ஸ்ல இருக்கிறவரு. பையன் மேல ரொம்பவும் அப்செட் ஆயிட்டாரு. நாங்க வர்னிங் பண்ணி விட்டுடலாம்னு தான் நெனச்சோம். ஆனா அவர்தான் கேஸ் போட்டே ஆகணும்னு பிடிவாதமா இருந்தாரு. கம்ப்ளைண்ட் பண்றவரே உறுதியா இருந்ததால நாங்க எப்ஐஆரை போட்டோம்” என்றார்.
“பையனை அடிச்சீங்களா?”
“இல்லைங்க மேடம்.”
“அடிக்காத, துன்புறுத்தாத போலீசா?
“சின்னபையன் மேடம். சும்மா ஒரு மிரட்டலிலேயே எல்லாத்தையும் கக்கிட்டான்.”
“ஆச்சரியம்தான். அதுசரி, அந்த பையனோட மாமா கொஞ்சம்கூட யோசிக்கலையா?”
“இல்லைங்க மேடம். அவருக்கு பையன்மேல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு தோணுது. மறுபடியும் இந்த பையனை வீட்டுல சேர்த்துக்கிற எண்ணத்திலேயே அவரு இல்லைன்னு உறுதியா சொல்லலாம். திருட்டுப் பயலுக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்னு போயிட்டாரு. பாவம், சின்ன பையன் பாதுகாப்பா இருந்து படிக்கட்டுமேன்னுதான் எப்ஐஆரை போட்டேங்க. என்னங்க பண்றது? இந்த காலத்துல சொந்தபந்தங்கள் எல்லா அப்படித்தானிருக்காங்க.”
அமுதா எல்லாம் கேட்டுவிட்டு, கொஞ்சம் நேரம் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தாள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், சொந்த அறிவைக்கொண்டு அலசு என்றது மனம். மிகவும் நிதானமாக கேட்டவைகளை வரிசையாக்கி, ஒரு சிறிய திரைப்படமாக மனதுக்குள் அங்குலம் அங்குலமாக ஓட்டிப்பார்த்தாள். ஒவ்வொரு நகர்வுக்கும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டுப்பார்த்து, நம்பகமான பதில்களைத் தேடிக்கொண்டிருந்தாள். சில தகவல்கள் மனதுக்கு உறுத்தலாகவே இருந்தன
.
“மோட்டார் எங்கேயிருக்கு?” எனக் கேட்டாள்.
“மேடம், கைப்பற்றப்பட்ட மோட்டாரும், எடுத்துக்கிட்டு வந்த சைக்கிளும் ஆட்டோவிலேயே இருக்குதுங்க. நீஙக உத்தரவு கொடுத்தீங்கன்னா உள்ள எடுத்துட்டு வரச்சொல்றேங்க?”
“கண்டிப்பா, உள்ளே கொண்டுவாங்க சார்” என்றதும், ஆய்வாளர் தன்னுடன் இருகாவலர்களையும் அழைத்துச்சென்றார். ஆட்டோ ஓட்டுனருடனும் சேர்ந்து மிகவும் சிரமப்பட்டு மோட்டாரை உள்ளே தூக்கி வந்து, நடுவர் அமுதாவுக்கு முன்னால் தரையில் வைத்தனர்.
அமுதா சிரித்தபடியேக் கேட்டாள். “எதுக்கு இவ்ளோ சிரமப்படறீங்க? அவ்ளோ வெயிட்டாவா இருக்குது?”
ஆய்வாளர், “மேடம் எபோவ் தர்ட்டி ஃபைவ் கேஜி இருக்கலாம்” என்றார்.
“இன்ஸ்பெக்டர் சார், முப்பத்தி அஞ்சு கிலோவுக்கும் மேலே எடையுள்ள இந்த மோட்டாரை இந்த சின்னபையனால தூக்க முடியுங்களா?”
இந்த கேள்வியை ஆய்வாளர் எதிர்ப்பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினார்.” மேபி இட் பாசிபிள். திருடனும்னு முடிவு பண்ணிட்டா முடியும்னு நெனைக்கிறேன்.”
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நான் கேட்கலே. முடியுமா, முடியாதா? அதை மட்டும் சொல்லுங்க.”
ஆய்வாளர் பதில் சொல்ல யோசித்தார்.
அமுதா தொடர்ந்தாள், “இந்த மோட்டாரை வெளியிலேர்ந்து உள்ளே எடுத்துட்டு வர்றதுக்கு ஒரு ஹெட்கான்ஸ்டபிள், ஒரு கான்ஸ்டபிள் தேவைப்படுது. கூடவே ஆட்டோ டிரைவரும். அதையே ரொம்பவும் தம்பிடித்து தூக்கிட்டு வர்றீங்க. உங்க முதல்தகவல் அறிக்கையைப் படிச்சா, இந்த பையன் ஒருவனே மோட்டாரை கழட்டி, காம்ப்பவுண்ட் சுவரில் தூக்கிவைச்சி, அப்புறம் ஏறி வெளியில் குதிச்சி, ஏற்கனவே முன்கூட்டியே வெளியில் நிறுத்தி வச்சிருந்த சைக்கிள் பின்புறமா தூக்கிவச்சி, அப்புறமா தள்ளிக்கிட்டு வரும்போது, ரவுண்ட்ஸ் போன நீங்க பார்த்துட்டீங்க. கையுங்களவுமா பிடிச்சிட்டீங்கன்னு இருக்குது. அதானே?”
“எஸ் மேடம், பையன் சொன்னதையும் வெச்சித்தான் நாங்க பதிவு பண்ணினோம். நாங்க கிராஸ் வெரிபிகேஷன் பண்ணிட்டுத்தான் எப்ஐஆர் ஃபைல் பண்ணினோம். நீங்களே பையனை விசாரிச்சுப் பார்க்கலாம் மேடம்.”
“கண்டிப்பா விசாரிக்கத்தான் போறேன். ஒரு விஐபியா, சமூகத்துல பெரிய ஆளா இருந்தா எப்ஐஆர் போடுறதுக்கே வாரக்கணக்கா மெனக்கெடறீங்க. அதையும் கேட்க வேண்டியிருக்குது. இதை மட்டும் விடியறதுக்குள்ள பண்ணிட்டீங்களா? அதுவும் நடுஇரவுல பிடிச்சிட்டு, வெரிபிகேஷன் முடிச்சிட்டு, காலையில குற்றம் சாட்டப்பட்டவர ஆஜர் பண்றீங்க. நீங்களும் உங்கக் குற்றத்தகவல் அறிக்கையும். போலீஸ் நினைச்சா, ஒரு எலி பெரிய யானையையே முழுங்கிடுச்சின்னு கூட லாஜிக்கே இல்லாம கேஸ் போடுவீங்க போலிருக்கே. எந்த ஒரு வழக்கிற்கும் நம்பகத்தன்மை வேணுமே. இந்த கேசில லாஜிக்கே இல்லை. என்ன சார் நீங்க?”
ஆய்வாளர் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றிருந்தார். தலைமைக் காவலர் பணிவாகக் குறுக்கிட்டார்.
“மேடம், பொருளை இழந்தவங்களோட கம்ப்ளைன்ட் இருக்குது, திருடு போன பொருள்களும் உங்க முன்னாடியே இருக்குது. திருடியதை ஒத்துக்கிட்ட ஆளும் இருக்குது. இந்த முதல்தகவல் அறிக்கையில சொல்லப்பட்டவை எதுவுமே உண்மைக்கு புறம்பானது இல்லே. இதுல இருக்கிற ஒரு வார்த்தைக்கூட கற்பனையானதும் இல்லே. நடந்தது அத்தனையும் உண்மை. இதுக்கும் மேலே என்ன லாஜிக்கை எதிர்ப்பார்க்கிறீங்க மேடம்?”
“சார், உங்களோட முதல்தகவல் அறிக்கையில இருக்கிறதை நான் மறுக்கலையே.”
“வேற என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்டார் ஆய்வாளர்.
“பாசிபிலிட்டி வேணும். இதை இந்த ஒரு சின்னபையனால மட்டும் செஞ்சிருக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு வரலையே சார்.”
“ஸோ?”
“ஸோ, வாட் ஸோ? வேர் ஈஸ் அனதர்ஸ்? திருட்டுல சம்பந்தப்பட்ட இன்னொரு நபர் அல்லது நபர்கள் எங்கே?ன்னு கேட்கிறேன். ஒரு போலீஸ் ஆபிசருக்கு நான் விளக்கம் தரணுமா? சொல்லுங்க. உங்க முன்னாடியே அதை நிரூபிக்கட்டுங்களா?” என்றபடி பையனை அழைத்து,
“இந்தாப்பா குமார், இந்த மோட்டாரைத் தூக்கி சைக்கிள்ல வச்சித் தள்ளிட்டுப் போய் காட்டு” என்றாள்.
பையன் பேசாமல் நின்றிருக்க, தலைமைக்காவலர், “அம்மா சொல்றாங்க இல்ல, எடுத்து வைடான்னா” என்று அதட்டினார்.
பையன் பயந்தபடியே சென்று அந்த மோட்டாரைத் தூக்க முயற்சி செய்தான். முடியவில்லை. “நல்லா தூக்கி வைடான்னா” என்று மீண்டும் அதட்ட, பையன் பெருமுயற்சி செய்தும் அவனால் லேசாக நகர்த்தத்தான் முடிந்தது. அவ்வளவுதான், சோர்ந்து விட்டான்.
அமுதா நிமிர்ந்து உட்கார்ந்து ஆய்வாளரைப் பார்த்தாள்.
“இப்ப நீங்களே சொல்லுங்க சார், இந்த பையனே திருடியிருந்தாலும், இதை இவன் ஒருத்தன் மட்டுமே செஞ்சிருக்க முடியுங்களா? இவ்வளவு எடையுள்ள மோட்டாரைத் தூக்கி, அதுவும் காம்ப்பவுண்ட் சுவரைத் தாண்டி போய் இறக்கி, சைக்கிள் பின்புறம் வைச்சி தள்ளிட்டுப் போகமுடியுங்களா?”
ஒருபக்கம் திரும்பி,” யாராவது வந்து அந்த மோட்டாரை தூக்கி சைக்கிளில் வையுங்கப்பா” என்றவுடன், அலுவலக சிப்பந்திகள் ஓடிவந்து, அதை பலங்கொண்டு தூக்கி மிதிவண்டியின் பின்புறம் வைக்கப்போய், வண்டி சமநிலையிழந்து தடுமாறியது. மற்றவர்கள் விழுந்து விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க, அதை தள்ளிக்கொண்டு போகச் சொல்லி பையனிடம் உத்தவிட்டாள் அமுதா.
இருவர் கெட்டியாக பிடித்திருக்கவே பையன் தள்ளிக் கொண்டுபோக மிகவும் தடுமாறினான். ஒருகட்டத்தில் அவனே வண்டியோடு சாயும்வரை போனதால், அமுதா நிறுத்தச் சொன்னாள்.
“இப்போ சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார். பரவாயில்லே, நீங்க சொல்ல விரும்பலேன்னாலும் நானே இந்த பையன்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். தம்பி இங்க வா” என்றதும், அவன் பதட்டமாய் அவளருகில் வந்து நின்றான்.
“உண்மையைச் சொல். இந்த சைக்கிள் யாரோடது?”
“வினுவோடது.”
“இந்த மோட்டாரை யாரெல்லாம் சேர்ந்து எடுத்துட்டுப் போனீங்க?”
“நான்தாங்கம்மா” என்றான் பரிதாபமாக.
“நீயும்தான், அப்புறம் உன்கூட வேற யாரெல்லாம் இருந்தாங்கன்னு கேட்கிறேன். இதா பாரு, யாருக்கும் பயப்படாதே. எதுக்காகவும் தயங்காதே. நானிருக்கிறேன். தைரியமா உண்மையைச் சொல்லு. என்ன நடந்திச்சின்னு சொல்லு.”
அவன் தயக்கமாய் எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “நானு பள்ளிக்கூடம் போவணும். சின்னப்பசங்க செயில்ல படிப்பெல்லாம் சொல்லித் தருவாங்க. டிராயிங்கெல்லாம் கத்துக்குடுப்பாங்கன்னு மாமா சொன்னாரு.”
“உன் மாமா கிடக்குறாரு. உனக்கு என்ன வேணும்? ஸ்கூலுக்குப் போயி படிக்கணும், டிராயிங் வரையக் கத்துக்கணும் அவ்வளவுதானே?”
“ம்” என்றான் மெல்லியதாய்.
“அதை நான் உனக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு நீ உண்மையை சொன்னாதான் செய்வேன். சொல்லு, யாரெல்லாம் உன்கூட இருந்தாங்க இந்த மோட்டாரை எடுக்கறதுக்கு?”
இப்போது பையன் முகத்தில் நம்பிக்கையும் தெளிவும் வந்தது. “நான் எடுக்கலேம்மா. மாமா பையன் வினுவும் ரவியும்தான் எடுத்தாங்க.” என்றான்.
அமுதா குறுக்கிட்டு, “அது யாரு ரவி?”
“ரவி வினுவோட கிளாஸ்மேட். அவன் அப்பா போலீசா இருக்காரு.”
இதைக்கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியானார்கள். ஆய்வாளர் பையனை பகைமைப் பார்வையோடு வெறித்தார். அமுதா அவரிடம் திரும்பி “இப்ப உங்க முறை வந்திடுச்சின்னு நினைக்கிறேன். நீங்க சொல்ல மறுத்தா, உங்க கமிஷ்னரை இங்கே வரைவழைக்க வேண்டியிருக்கும், சொல்றீங்களா சார்” என்றாள்.
இதற்குமேல் மறைப்பதில் பலனில்லை என்றுணர்ந்தாரோ என்னவோ ஆய்வாளர் பேசினார்.
“ஐயம் வெர்ரி சாரி மேடம். இந்த பிரசிடென்டோட பையன் வினுவும், பி செவன் ஸ்டேஷன் எஸ்ஐ வேலுமணி மகன் ரவிசங்கரும் ஒரே ஸ்கூல்ல கிளாஸ்மேட். அவங்களோட பழக்க வழக்கங்கள் சரியில்லேன்னு எங்களுக்கும் தெரியும். சிலசமயம் வழிப்பறியிலேயும் ஈடுபட்டதாகவும் கேள்விபட்டோம். நேற்று, நான் என் டீமோட சங்கர் நகர் பக்கம் மிட்நைட் ரவுண்ட்ஸ் போயிட்டிருந்தப்போ, வினுவும் ரவியும் சேர்ந்து, சைக்கிளில இந்த மோட்டாரை வச்சித் தள்ளிட்டு வர்றதைப் பார்த்து விசாரிச்சேன். ஸ்டேசனுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டேன். எனக்கு இருக்கிறது ஒரே பையன்தான். அவனை விட்டுடுங்கன்னு எஸ்ஐ வேலுமணி காலில் விழாதக்குறையா அழுதாருங்க.”
“அதனால, அந்த எஸ்ஐயோட பையனை மட்டும் வெளியே விட்டிருப்பீங்க?” என்றதும் ஆய்வாளர் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
“ம், சொல்லுங்க. இன்னும் உங்க ஸ்டேட்மென்ட் முடியலை. அப்புறம் என்ன நடந்திச்சு?”
“அப்புறம் மேடம், மறுநாள் விஷயம் தெரிஞ்சதும் பிரசிடென்டும் வந்துட்டாருங்க. அவரும் ரொம்பவே அழுது கெஞ்சினாருங்க.”
“ஓகோ, கெஞ்சினா விட்டுடுவீங்களா? நல்ல பாலிசிதான். சொல்லுங்க. கெஞ்சினாரா? இல்ல பேரம் பேசினாரா?”
ஆய்வாளர் பதில் சொல்ல முடியாமல் மவுனமாய் நின்றிருக்க,
“சரி, அதை விடுங்க. உங்களுக்குள்ள ஆயிரம் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கும். எவ்ளோ பேரம் படிஞ்சதுன்னு கேட்டு, போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட மரியாதையை நான் கெடுக்கவிரும்பலை. அந்த ரெண்டு பேரையும் விட்டாச்சில்ல? அப்புறம், எப்படி இந்த பையன் இதுக்குள்ள வந்தான்?”
சிறிய தயக்கத்துக்குப்பின் ஆய்வாளர் தொடர்ந்தார்.
“இந்த பையனை தன்னோட வச்சிருக்கிறதுக்கு அவனோட மாமாவுக்கு விருப்பமே இல்லை. அதுவுமில்லாம, இந்த கேசை புடிச்ச விசயம் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லாருக்குமே தெரியும். எந்த நடவடிக்கையும் எடுக்காம விட்டா, போலீசோட மரியாதையே போயிடும்கிறதால” அதற்குமேல் சொல்ல முடியாதவராக நின்றார்.
“இப்படி இருந்தா எப்படி சார் வரும் போலீஸ் மேல மரியாதை? தப்பை செஞ்சவங்களை விட்டுட்டு, பணத்துக்காக ஒண்ணும் தெரியாத சிறுவன் மேல கேசைப் போட்டிருக்கிறீங்க? படிக்க வைக்கிறதா ஆசைவார்த்தைக் காட்டி, தப்பை ஒத்துக்க வச்சிருக்கிறீங்க. மிஸ்டர் ஆபிசர், ஒருநிமிஷம் ஒரு சாதாரண மனுசனா இருந்து நீங்களே யோசனைப் பண்ணிப் பாருங்க. படிக்கணும்னு ஆசைப்படற பையனைப் படிக்கவைக்க முயற்சி எடுக்கலாமா? அந்த ஆசையையே காரணமா வச்சி, செய்யாதக் குற்றத்துக்காக ஜெயிலுக்கு அனுப்பலாமா?”
“இந்த வயசிலே எந்த விவரமும் தெரியலே. நாளை வளர்ந்து பெரியவனாகி, சிந்திக்கிற பக்குவத்துக்கு வந்தபிறகு, தனக்கு நடந்ததை நினைச்சிப் பார்த்தான்னா, அவன் மனசுல என்ன ஓடும்? ஒரு குழந்தைன்னு கூடப் பார்க்காம, கொஞ்சம்கூட மனசாட்சியும் இரக்கமும் இல்லாம, தனக்கு அதிகாரம் இருந்துட்டா எதை வேணும்னாலும் செய்யலாம் அப்படிங்கிற ஒரு மோசமான சமுதாயத்துலேயா நாம வாழ்ந்துட்டிருக்கிறோம். நாம பாதிக்கப்படும்போது, ஒரு மனுசன், ஒரே ஒரு மனுசன்கூடவா நமக்காக பேச முன்வரலை அப்படிங்கிற கோபம், இந்த சமூகத்து மேலேயும், அரசாங்க அதிகாரத்தின் மேலேயும் வராதா? அப்படி வெறுப்பு வந்தா, அவனை இந்த சமூகத்துக்கு எதிரா செயல்படத் தூண்டாதா? குற்றத்தைத் தடுப்பதும், தண்டிப்பது மட்டும் சட்டத்தோட வேலையில்லை. ஒரு குற்றவாளி உருவாகாமப் பார்த்துக்கிறதும் சட்டத்தோடக் கடமைத்தான்” என்றாள்.
ஆய்வாளரும் காவலர்களும் எதுவும் பேசாமல் உறைந்து போய் நின்றார்கள். ஆய்வாளர், “ஐயம் ரியலி வெர்ரி சாரி மேடம்” என்றார்.
“உங்க சாரி எல்லாம் என்கிட்டே ஏன் சொல்றீங்க? நீங்க போட்டுக்கிட்டிருக்கிற கண்ணியமான காக்கிச்சட்டைக்கிட்டச் சொல்லுங்க. உங்க மனச்சாட்சிக்கிட்டச் சொல்லுங்க. உங்களால பாதிக்கப்படுற எத்தனையோ அப்பாவி மக்கள்கிட்டப் போய் சொல்லுங்க” என்றாள்.
பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கில் நம்பகத்தன்மையை நிரூபிக்க தவறியதாலும், உண்மையல்லாத வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கு என்று தெரிய வந்ததாலும், இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கிறது. மேலும், சட்டத்தைக் காக்கும் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு, இந்த வழக்கைத் தவறாகக் கையாண்டதற்காகவும், உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிட்டதற்காகவும், ஒர் அரசு ஊழியராயிருந்து கையூட்டு பெற்றக் குற்றத்திற்காகவும், கடமையிலிருந்து தவறியதற்காகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், கண்ணியமான காவல்துறை பணியினை இழிவுப்படுத்தியதற்காகவும், சம்பந்தப்பட்ட இந்த அலுவலர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.” என்று தீர்ப்பெழுதி கையெத்திட்டாள்.
அதை, புரியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பையன் நின்றிருக்க, அமுதா அவனைத் தொட்டு தன்னருகே அழைத்து, “கண்ணா, உன்னை ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கிறேன். டிராயிங் கிளாஸ் சேர்த்து விடறேன். என்கூட வர்றீயா?” என்று கேட்டதும், பையனுக்கு எங்கிருந்தோ அடக்கமுடியாத அழுகைப் பொங்கி வந்தது.
*********