”தாத்தா.. அந்த மரத்திற்கு என்ன பெயரு? , சொல்லு தாத்தா”, என்று மாலை நடைப் பயணத்தில் கைபிடித்தபடி பேரன் கபிலன் ரங்கராஜனிடம் கேட்டான்.
”ஆலமரம் டா பேராண்டி, நம்மூரில் கிட்டதட்ட என்பது வருசமா இந்த மரம் இருக்கிறது , அத்தோட வேரைப் பாத்தியா.. எவ்வளவு தூரம் பரந்து விரிந்து கிடக்கது, மரத்திலிருந்து தொங்கதுல விழுது, அதைப் பிடித்தபடி நாங்க ஊஞ்சலாடுவோம்.. பள்ளிக் கூடம் முடிஞ்சதும் என் கூட்டாளிகளோடு இங்கே தான் விளையாடிக்கிட்டு இருப்போம்..
அப்ப என் ஆத்தா வீட்டிலிருந்து அடிக்க குச்சி தூக்கிட்டு வரும் ..ம்ஹீம் அதுயெல்லாம் ஒரு காலம்”, என்று தன் ஐந்து வயது பேரனிடம் விரல் பிடித்துச் சொல்லியபடியே நடந்தார்..
”ஒஹோ, தாத்தா சொல்லும் கதையைச் சுவாரசியமாகக் கேட்ட படி நடந்தான்..
”இந்த மரத்திற்கே ஒரு கதை என் ஆத்தா சொல்லும், அந்தக் காலத்திலே குடும்ப இப்படிப் பெருகிப் பல கிளையாக இருந்தாலும் அடிவேர் வலிமையாக இருந்தால் என்றும் வீழ்ந்து போகாது மரம், அது மாதிரி தான் குடும்பமும், சொல்லும் என் ஆத்தா”, என்று சொல்லிய ரங்கராஜனை முறைத்தான் கபிலன்,
”ஏங்கக் கண்ணு முறைக்கிற”,
”இந்த மரத்தின் பேரைக் கேட்டதற்கு இம்மாம் பெரிய கதை சொல்லிறீயே தாத்தா”, என்றவன், ”நான் வீட்டிலிருந்தா செல்போன்ல விளையாடிக்கிட்டு இருப்பேன்”, என்று சிணுங்கிய கபிலனைப் பார்த்துச் சிரித்த ரங்கராஜன்,
”ஆமாம் டா பேராண்டி இத்துண்டு வச்சுகிட்டு விளையாடிக்கிட்டு இருப்பீயா, இப்படி காத்தாட நடந்து பிள்ளைகளோடு ,சேர்ந்து விளையாடினா உடம்புக்கு நல்லது, நீ செல்லுல விளையாடினா கண்ணுக்குத் தானே கெடுதலு கண்ணு”, என்று சொல்ல,
”போ தாத்தா, இப்ப பாடமே அதிலே படிக்கிறேன், இதில் விளையாடக் கூடாதா” என்றவனின் தலையை வாஞ்சையாக வருடி விட்டவர்,” நாங்க எல்லாம் அப்ப”, தொடங்கிய ரங்கராஜனைப் பார்த்து அலறிய கபிலன், ”தாத்தா விட்ருங்க, நா போகிறேன்”, அவரின் கை விரலை விட்டு ஓட அவனைப் பார்த்துச் சிரித்தபடி பின் தொடர்ந்தார் ரங்கராஜன்.
தன் ஒரே மகள் வசுமதி, மாப்பிள்ளை ஆனந்தனுக்கும் கபிலன், ரகுவரன் இரண்டு குழந்தைகள், இரண்டாவது குழந்தை மூன்று வயது , ஆனந்தன் மிலிட்டரியில் வேலை செய்வதால் ரகுவரன் அவர்களோடும், கபிலனை தன் கூட வைத்துக் கொண்டு அவர்களை அங்கே அனுப்பி விட்டார். கிராமத்தில் தன் மனைவி விசாலாட்சியுடன் தன் பேரனை அங்கே இருக்கும் பள்ளியில் கொண்டு சென்று விடத் திரும்பக் கூட்டிக் கொண்டு வர என்று அவர்களின் தனிமைக்குக் கபிலன் தான் மகிழ்ச்சி ஊற்றாக இருக்கிறான்.
தினமும் சாயங்காலம் தன் பேரனை அழைத்துக் கொண்டு ஊரே ஒரு வலம் போது அவன் கேட்கும் அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லியபடியே நடப்பார்கள் இருவரும்.. காட்டுப் பூ, செடிகொடிகள் ,பறக்கும் பறவையின் குரலுக்கு எல்லாம் அர்த்தம் கேட்கும் சுட்டி வாண்டு தாத்தா பாட்டியின் செல்லமான பேரனாக வளர்ந்தான் கபிலன்.
உணவை அம்மாயி விசாலாட்சி ஊட்ட, கதை சொல்லு தாத்தா மழலையாகச் சிணுங்குபவனைப் பழைய ராஜா கதைகளைக் கூறுவார், அதுக்கும் கிண்டலாக போ தாத்தா உனக்குக் கதை சொல்லத் தெரியல, அதெப்படி ஏழு கடல், ஏழு காடு, ஏழு மலை தாண்டி ஏதோ ஒரு குகைக்குள்ள இருக்கிற கிளியிலே ராஜா உயிர் இருக்கும் கதைச் சொல்லற, அப்ப என் உயிரும் உன் உயிரு, அம்மாயி உயிரு இப்படி தான் எங்கேயாவது இருக்குமா என்று கேட்பான்.
இதை எல்லாம் பார்த்து விசாலாட்சி ”கேட்கிறான்ல இப்ப பதில் சொல்லுங்க”, என்று சிரிக்க,
”டேய், பாருடா அந்தக் கிழவி நக்கலாகச் சிரிக்கது, நம்முடைய உசிரு நம்மகிட்டத் தான் இருக்கும், இந்தக் கதையை என் ஆத்தா சொல்லும் போது ஊம் ஊம் சொல்லுவோம், நீ விடலை பையன் இத்துண்டு இருந்துகிட்டு கிண்டலா பண்ணற” ,என்று வயிற்றில் கிச் கிச் மூட்டக் கபிலனும் கலகலவென்று சிரிக்க அந்நொடிகளை மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்கும். தினமும் இப்படிப் பல கதைகளை இரவு நேரத்தில் பேரன் தூங்குவதற்குக் கூறுவார் ரங்கராஜன்.
தினமும் காலை மாலை என இரண்டு நேரமும் வீடியோ காலில் கபிலனோடு, வசுமதியும், ஆனந்தனும் பேசினாலும் பேரனுக்குப் பெற்றோர் நினைவு வந்து சிறு அளவிலும் ஏங்கிடக் கூடாது என்று எதாவது சொல்லி பேரனைச் சிரிக்க வைத்துக் கொஞ்சிப் பேசி மகிழ்வார்கள் அந்த முதியவர்கள்.
இப்படியே தினம் பல கேள்விகளுக்குப் பதிலும் கதைகளுமாக நாட்கள் சென்றுக் கொண்டிருக்க, ஒரு நாள் கபிலன் படிக்கும் பள்ளியிலிருந்து போன் வரவும், பதறியபடி இருவரும் ஓடினார்கள்,
உங்கள் பேரன் கபிலன் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகச் சொல்லவும் என்னமோ ஏதோ என்ற பதற்றமும் பயமும் அதிகமாக இருக்க விரைவாகச் சென்றனர்.
அங்கே துவண்டு போன கொடியாய் முகம் வாடிக் கிடக்க, ”அய்யோ என்னாச்சு என் பேரனுக்குக்”, கபிலனைத் தூக்கியபடிக் கேட்டவரைக் கண்ட அங்கிருந்த டீச்சர், ”மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தான், திடீர் மயக்கம் போட்டு விழவும் தான் உங்களுக்குப் போன் பண்ணினோம்”, என்று சொல்லிய ஆசிரியரிடம் நின்று மீதியைக் கேட்காமல் அழும் விசாலாட்சியை அழைத்துக் கொண்டு வர
அதற்குள் ஆம்புலன்ஸ் பள்ளியில் வந்து நிற்க, வேகமாக அதில் ஏறியவர்கள் மருத்துவமனைக்குக் கபிலனோடு சென்ற முதியவர்களுக்கு உள்ளமோ படபடத்தது. கன்றுக் குட்டியாய் துள்ளிக் குதித்து விளையாடும் குழந்தை இப்படி நினைவு இல்லாமல் கிடப்பதைக் கண்டு காரண மறியாமல் திகைத்துப் போய் செய்வது அறியாமல் ரங்கராஜன் இருக்க விசாலாட்சியோ, அழுகையின் உச்சத்திலிருந்தார்.
மருத்துவமனைக்குச் சென்றதும் எமர்ஜென்சியில் சேர்த்தி எல்லா டெஸ்ட் எடுத்து குழந்தை மயக்கம் தெளிய வைக்கப் போராடிய டாக்டர்,நர்ஸ் என அந்த இடமே பதட்டமாக இருக்க, ரங்கராஜனும் விசாலாட்சிக்கும் எமர்ஜென்சிக்குள் என்ன நடக்கிறது, பேரன் எப்படி இருக்கிறான் என்று தெரியாமல் பதறியபடி ஊரில் இருக்கும் அத்தனை தெய்வங்களிடம் வேண்டுதலை வைத்தபடி உட்கார்ந்திருந்தனர் .
நான்கு மணி நேரம் கழித்து கண் முழித்த கபிலன் கையில் ட்ரீப்ஸ் இறங்கும் கையை வலியால் முகம் சுருங்கி அழுகைச் செல்ல, ”தாத்தா, அம்மாயி”, அனர்த்த ஆரம்பித்தான்.
எல்லா டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் அதைப் பார்த்தபடியே இருந்த டாக்டர், கபிலன் முழித்ததும் அருகில் வந்து, அவன் கன்னத்தை மெதுவாகத் தட்டி ”கண்ணா என்ன பண்ணுச்சு உங்களுக்கு”, என்று கேள்வி கேட்க,
கபிலனோ தெரியாத முகமும், சுற்றி இருக்கும் சூழலும், அவனின் வலியும் அழுகை மட்டுமே கொடுக்க, ”தாத்தா வேணும்”, அழுதான் கபிலன்.
அங்கிருந்த நர்ஸைப் பார்த்த டாக்டர் ”பேஷண்டோ வந்தவர்களை உள்ளே கூப்பிடுங்கள்”, என்று சொல்லியவர், கபிலனிடம் திரும்பி ஸ்டேஸ்கோப் மூலமாகச் பரிசோதனை பண்ணினார்.
பின்னர் வயிற்றின் பக்கத்தை அமுக்கிப் பார்க்கக் கபிலனோ வலியால் துடித்து டாக்டர் கையை தள்ளிவிட்டு அய்யோ வலிக்கதே உரத்த குரலில் அழுகை உச்சத்தைத் தொட,
நர்ஸ் வந்து சொல்லியதும் வேகமாக உள்ளே வந்த ரங்கராஜன் பேரனின் அழுகைப் பார்த்து வேகமாக அருகில் சென்றவர், ”ஒண்ணுமில்லே கண்ணு”, சொல்லித் தட்டிக் கொடுக்க அவரை நெருங்கி கைகளைப் பிடித்தபடி ”வீட்டுக்குப் போகலாம் தாத்தா”, என்று சொல்லி அழுதான் கபிலன்.
”போகலாம் கண்ணு,அழுகாதே”, என்றவர், டாக்டரிடம் திரும்பிப் பார்க்க,
டாக்டரோ ”இதற்கு முன்னாடி இப்படி மயங்கி விழுந்திருக்கிறானா”, என்று கேட்டார்.
”இல்லைங்க டாக்டர், இன்றைக்குத் தான், காலையிலே கூட நல்ல சாப்பிட வைத்துத் தான் அனுப்பினேன்”, என்று ரங்கராஜன் சொல்ல,
”சரிங்க பெரியவரே, இன்று இங்கே இருக்கட்டும், இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எடுக்கணும், நாளைக்கு வீட்டுக்கு அழைத்துப் போகலாம்”, என்று சொன்னார் டாக்டர் .
”பயப்பட மாதிரி எதுவுமில்லீங்களே டாக்டர்”,என்று தழுதழுத்த குரலில் ரங்கராஜன் கேட்க,அவரை ஒரு நிமிடம் பரிதாபமாகப் பார்த்தவர், ”பயப்பட எதுவுமில்லைங்க, நாளைக்கு ரிப்போர்ட் எல்லாம் வந்தும் பார்த்துட்டுச் சொல்கிறேன்”, என்று சொல்லிச் சென்று விட, கபிலனின் தலையை வருடியபடி ”எங்கயாச்சும் வலிக்குதா கண்ணு”, என்று பேரனிடம் கேட்க அவனோ தாத்தாவின் கையை இறுக்கிக் கொண்டு விடாமல் பிடித்தவன் ”வயிறு வலிக்கது தாத்தா”, என்று சொன்னான்.
”அதுக்கு தான் டாக்டர் மருந்து கொடுத்திருக்கிறார், சரியாகிடும் தங்கம்”, என்று சொல்லிவிட்டு அவனைத் தட்டித் தூங்க வைத்தார்.
ஆனால் அவரின் முகமும் விசாலாட்சியின் முகமோ பயத்தில் களையிழந்து கிடந்தது.
அடுத்தநாள் டாக்டர் ரிப்போர்ட் வந்ததும் அதைப்பற்றிக் கேட்ட முதியவர்கள் இருவரும் உயிரற்ற ஜடமாக மாறினர்.
”அய்யோ இந்தப் பிஞ்சுக்கு ஏன் இந்தத் தண்டனை”, என்று ரங்கராஜன் அழுக, விசாலாட்சியோ மயங்கியே போனார்.
விசாலாட்சிக்கு ட்ரீப்ஸ் போட்டுப் படுக்க வைத்தவர்கள், ரங்கராஜன் கலங்கிய குரலில் ”இது சரியாக்க எதும் வழியிருக்கா டாக்டர்:’, என்று கேட்டார்.
”பெரியவரே இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது , ஆறு வயதுக் குழந்தைக்கு இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டுமே கொடுக்க முடியும், டயாலிசீஸ் பண்ண முடியாது , குழந்தை அதைத் தாங்கக் கூடிய நிலையில் இல்லை.
மாற்று ஏற்பாடு எதாவது செய்ய முடியுமா பார்க்கலாம், என்று சொல்லியவர், இனி குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரம் உப்பு இருக்காமல் தண்ணீர் அளவு எதும் சாப்புடனும் எது சாப்பிடக் கூடாது என்று நர்ஸ் சொல்வார்கள்,அதுப் படிக் கொடுங்கள், குழந்தையுடைய அம்மாவையும் அப்பாவையும் வரச் சொல்லுங்கள்”, என்று சொன்னார் டாக்டர்.
”பிறந்திருந்து நல்ல ஆரோக்கியமாகத் தானே இத்தனை நாட்கள் இருந்தான். எப்பாவது காய்ச்சல் சளி பிடிக்கும், வேறு தொந்தரவே இல்லையே”, என்று புலம்பிய ரங்கராஜனை வருத்ததுடன் பார்த்த டாக்டர்,
”பெரியவரே, எது எப்படி வரும் யாருக்குத் தெரியும், இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்தது, இப்ப தெரிந்திருக்கிறது அவ்வளவு தான், இதைச் சரிப் பண்ண வழிக் கிடைக்கிறதா என்று பார்ப்போம், மனசை தளரவிடாதீர்கள்”, என்று சொன்னார் டாக்டர்.
துண்டால் வாயை மூடி அழுதபடி எழுந்து தள்ளாடியபடியே தன் பேரனிடம் சென்றவர், ”அய்யா, சாமி இப்பவும் வலி இருக்கா ”,என்று கேட்க
”இல்லை தாத்தா வீட்டுக்குப் போகலாம், எனக்குப் பசிக்கது, அம்மாயி எங்கே?”, கேட்டவனைச் சமாதானம் படுத்தி வீட்டுக்கு அழைத்துவந்தனர் கபிலனை.
விசாலாட்சியோ பேரனைப் பார்த்துக் கண்ணீர் விட, ரங்கராஜன் அவரை அதட்டி ”குழந்தைக்கு முதல சாப்பிடக் கொடு ”,என்று சொன்னார்.
அவனுக்கு இட்லியும் சர்க்கரை சிறிதளவு வைத்துக் கொடுக்க கபிலனால் சாப்பிட முடியவில்லை. அன்றிலிருந்து எது கொடுத்தாலும் உப்பு இல்லை ,என்னால் சாப்பிட முடியல, வாந்தி வருது, யூரின் போக முடியல அழுகையும் அவன் வலியால் துடிப்பதைக் கண்ணால் காண முடியாமல் தவித்தார் ரங்கராஜன்.
மகளும் மருமகனும் வந்தவுடன் டாக்டர் பார்த்துப் பேசினார்கள், ஏதோ ஏதோ மருந்துகள் டெஸ்ட்கள் பலதை எடுத்து கபிலன் படும் சித்ரவதையைக் காண முடியாமல் துடிதுடித்துப் போயினர் வீட்டில் எல்லாரும்.
வலி அதிகமாக அதிகமாகக் கபிலன் அன்று மூச்சு விடவே சிரமம் பட்டான்.
அவன் அருகிலே கைகளைக் கோர்த்தபடி அமர்ந்திருந்த ரங்கராஜன் அவனுக்குப் பிடித்த கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
கபிலனோ, ”தாத்தா இப்ப என் உயிரை எங்காவது ஒளிச்சு வச்சிருங்க, அப்பத்தான் யாருக்கும் தெரியாமல் இருக்கும்”, என்று சொல்ல அதைக் கேட்டவுடன் ஓவென்று கதறினார்கள் எல்லாரும்.
அன்று இரவில் கபிலனோடு பேசிக் கொண்டிருந்த ரங்கராஜன்,” என்னடா கண்ணா, எதாவது குடிக்கீறியா”, என்று கேட்க,
அவனோ ”வேண்டாம் உப்பில்லை சப்பனு இருக்கு” என்றவன் ,தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு, எதையோ பேசியபடி இருந்தவன் குரல் சட்டென்று நின்றது.
ஒரு நொடி பிரபஞ்சமே மூச்சு விட மறந்தது போல நிசப்தமாக ஆனது.
ஆம் கூட்டிலிருந்து அச்சிறுகுஞ்சுவின் உயிர் வானில் எங்கோ நட்சத்திரமாக மாறிப் போக அந்நொடியில் கதறிய ரங்கராஜனுக்கு ”எங்கே போனாலும் கூடவே கூட்டிப் போ தாத்தா சொல்லுவீயே கண்ணு, இன்றைக்குத் தாத்தாவைத் தனியே விட்டுவிட்டு நீ எங்கே போன”, கனக்கும் மனத்தோடு இருண்ட வானில் பேரனைத் தேடினார் ரங்கராஜன்.
ஆனால் கபிலன் இருப்பதாக எண்ணிக் கொண்டு கைகளை பிடித்தபடி பேரனிடம் பேசியபடியே தினமும் சாயங்காலம் ஊரை வலம் வருகிறார் தனிமையில்..
எந்த நோய் யாருக்கு எப்ப வருகிறது என்பது தெரியவில்லை.. இறைவனின் கணக்கில் பிஞ்சு முதிர்வும் ஒன்று தான் இன்று வரையில் …
**************************