அப்போது எனக்கு நிச்சயம் முடிந்து, எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது, என்னுடைய திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் அதன் நினைவாக விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை எங்களது திருமணத்திற்கு வருவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது.
ஆனால் என்னுடைய அப்பா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மரக்கன்று ஒன்றை பரிசாகக் கொடுப்போம் என்று அவர் முடிவு செய்து விட்டார். அதனால் நான் என் அப்பாவிடம் சண்டையிட்டு பயங்கர கோபமாக இருந்தேன்.
அதற்குப் பின் என் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. என் அப்பாவின் விருப்பப்படி திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோருக்கும் மரக்கன்றையே பரிசாக வழங்கினார், ஆனால் எனக்கு அதில் கொஞ்சம்கூட திருப்தியில்லை.
அதற்குப்பின் நானும் என் கணவரும் சென்னையில் குடியேறினோம். என்னுடைய முதல் பிறந்த நாளன்று என் கணவர்,”உனக்கு என்ன பிடிக்கும் என்று சொல், அது எவ்வளவு விலையானாலும் நான் வாங்கித் தருகிறேன்” என்று என்னிடம் கேட்டார். நான் கிராமத்தில் வளர்ந்ததால், அடிக்கடி ஊருக்கு அருகில் உள்ள காட்டிற்கு செல்வது வழக்கம்.
அப்படி இருக்கும் வேளையில், அந்த வருடப் பிறந்தநாளன்று, எனக்கு என் ஊரில் காட்டிற்குச் சென்ற பழைய ஞாபகங்கள் வந்தது. அதனால் என் கணவரிடம் எனக்கு காட்டிற்கு செல்ல ஆசையாக உள்ளது. அதனால் என்னை எதாவது பக்கத்தில் இருக்கும் காட்டிற்குக் கூட்டிச் செல்லுங்கள் என்று நான் கேட்டேன். அவரும் அன்று எனக்குப் பிறந்தநாள் என்பதால், என் ஆசையை நிறைவேற்ற கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமே என்று சரியென்று ஒப்புக்கொண்டார்.
அதற்குப்பின் நானும், என் கணவரும் அவருடைய இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி சுற்றிலும் காடுகளைத் தேடி அலைந்து திரிந்தோம். ஆனால் காடு என்ற ஒன்றையே எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நம்ம வடிவேலு சார் சொல்லுவதைப்போல், ”என்னடா இங்க இருந்த காட்டக் காணும்” அப்படிங்கிற மாதிரிதான் இருந்திச்சு. அதற்குப் பின் வெகுநேரம் காட்டினைத் தேடிவிட்டு என் கணவரும், நானும் எங்கும் காட்டிற்கான சுவடுகள் தெரியாததால் வீட்டை நோக்கித் திரும்பி வந்துவிட்டோம்.
அதற்குப் பின் என் கணவர்,”ஏம்மா! பிறந்தநாள் அன்னைக்கு ஏதாவது எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருட்களையோ? எளிதாகப் போகக் கூடிய இடங்களையோ? கேட்டிருக்கலாம் இல்லையா? நான் சென்னையில் எங்குபோய் காட்டினைத் தேடுவது?? “ என்று என்னிடம் கோபித்துக் கொண்டார்.
“ஏன் என் பிறந்தநாளன்று மரங்களின் நடுவே நின்று இயற்கையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்தது தவறா? “என்று நான் கேட்டேன். அப்போது அவர், ”இப்போதெல்லாம் மரங்கள், காடுகள், சுத்தமான காற்று இவைகளெல்லாம் தான் கிடைப்பதற்கு அரிய விஷயங்கள். அதனால் அதைத் தவிர வேறு எதாவது கேள், அது எவ்வளவு விலையானாலும் உடனே வாங்கித் தருகிறேன்” என்று சொன்னார்.
அப்போதுதான் எனக்கு காடுகளின் அருமை புரிந்தது.எப்போதுமே ஒரு விஷயம் நமக்கு எளிதாகக் கிடைத்தால் அதன் அருமை நமக்குத் தெரியாதுதான் இல்லையா??அதற்குப்பின்தான், என் அப்பா ஏன் என் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோருக்கும் மரக்கன்றினைப் பரிசாகக் கொடுத்தார்? என்பது எனக்குப் புரிந்தது. இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விட விலையுயர்ந்த பொருள் என்னவென்றால் அது இயற்கை தந்த காடுகளும், மரங்களும், அவற்றில் இருந்து கிடைக்கும் சுத்தமான காற்றும் மட்டுமே!
அது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காத பொருள் என்பதை அந்த நொடியில்தான் நான் உணர்ந்தேன்! அப்போதுதான், ”நம் அப்பா உண்மையிலேயே நம் திருமணத்திற்கு வந்த எல்லோருக்கும், விலையுயர்ந்த பொருளைத்தான் கொடுத்திருக்கிறார்” என்று என் அப்பாவின் செயலை எண்ணி மனதில் பெருமிதம் கொண்டேன்.
அதற்குப்பின் எங்களுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியிருந்த நிலையில், எங்கள் உறவினர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கு செல்லும்போதும், அவர்கள் எங்களிடம், ஒரு மரத்தினை காண்பித்து, “இது உங்கள் திருமணத்தன்று உங்கள் அப்பா கொடுத்த மரக்கன்றுதான், இப்போது பெரிதாக வளர்ந்துவிட்டது” என்று எங்களிடம் சொல்லும் பொழுது, உண்மையிலேயே என் அப்பாவை நினைத்துப் பெருமையாகத்தான் இருக்கும்.
வேறெந்தப் பொருளைப் பரிசாகக் கொடுத்திருந்தாலும், எல்லோரும் மறந்திருப்பார்கள், ஆனால் மரக்கன்றினைக் கொடுத்ததால், அது அவர்களுக்கு சுத்தமான காற்றினை வழங்கி, சத்துள்ள காய்கனிகளை வழங்கி, இளைப்பாற நிழலினையும் வழங்கி எல்லோருக்கும் பயனளிக்கக் கூடியதாக , எல்லார் வீட்டிலும் எங்கள் திருமண விழாவின் நினைவுகளுக்கும் அடையாளமாக அந்த மரங்கள் இடம் பெற்றுமுள்ளது என்பதை அப்போது உணர்ந்தேன்!
அதனால் மக்களே நீங்களும் உங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வருபவர்களுகளின் மனதில் என்றும் உங்கள் திருமணவிழா நினைவுகள் நீங்காமல் நிலைத்திருக்கும் வகையில் இப்படி மரக்கன்றுகளைப் பரிசாக கொடுங்கள்.!