மழைக்காலத்தில் அதிகமாக வரும் கொசுக்களை விரட்ட பல கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் வீட்டில் உள்ள இயற்கை முறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிப்பார்க்கலாம்..

கொசு இல்லாத இடம் எங்கேயும் இருக்கவே முடியாது. அதுவும் மழைக்காலம் ஆரம்பிச்சா அதோடு ராஜ்ஜியம் தான். கொசு வந்துட்டு மட்டுமா போக போகிறது மனிதர்களுக்கு பெரும்பாலான நோய்களை தந்துவிட்டு தான் போகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ நாம் பலரிடம் பேசும் போது அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தை கொசு தொல்லை தாங்க முடியலேன்னு. இப்படி நம் கூடவே இருந்து நமக்கு நோய் பரப்புகின்ற இந்த கொசுவினை விரட்ட சந்தைகளில் கொசு வத்தி சுருல், கொசு பேட், திரவம், கொசுவினை பிடிக்கும் மெசின் என பல வந்து குமிக்கின்றன. ஆனால் அதனை சிறிதும் அவை சட்டைப்பண்ணாமல் அதனுடைய பணிகளை மிகச்சிறப்பாக செய்துவருகிறது. இந்த சூழலில் உடலுக்கு எந்த தீங்கினையும் விளைவிக்காமல் வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் கொசுக்களை எப்படி ஒழிக்கலாம் என்பது கொஞ்சம் பார்க்கலாம் வாங்க…
எலுமிச்சையும் கிராம்பும்:

நல்ல சாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி எடுத்துக்கொண்டு அதில் கிராம்புகளை நட்டு வைத்து கொள்ள வேண்டும்.அதனை வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் நடுவில் வைக்கவேண்டும். குறிப்பாக எலுமிச்சையின் வாசமும், கிராம்பின் வாசமும் கொசுக்களிடமிருந்து நம்மை விலக்கி வைக்கும். இந்த செயல்முறை 3 முதல் 4 மணி நேரம் வரை பலனளிக்கும். இதோடு இதன் வாசனையால் வேறு பூச்சிகளும் நம்மை நெருங்க வாய்ப்பில்லை. அதோடு கொசுக்கள் அதிகமாக நடமாடும் நேரமான மாலை 5 மணிக்கு வைத்தால் இரவில் கொசு தொல்லை அதிகம் இருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த முறையினை கொசுக்களை விரட்ட பயன்படுத்த தொடங்கினால் தினமும் எலுமிச்சை பழங்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்த கொசு திரவம்

கொசுக்களை விரட்டுவதற்கு கடைகளுக்கு சென்று வாங்கும் கொசு திரவம், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொசுவினை ஒழிக்க வீட்டில் இருக்கும் சுத்தமான வேப்ப எண்ணெய் 50 மில்லி எடுத்துக்கொண்டு அதில்5 கற்பூரத்தினை போட்டு கரைக்க வேண்டும். அவை நன்றாக கரைந்ததும் ஏற்கனவே நாம் கடைகளில் வாங்கி உபயோகித்த கொசு திரவ பாட்டில் இருந்தால், அதில் இதனை ஊற்றி வழக்கம் போல மின்சாரத்தில் இயங்க செய்ய வேண்டும். இந்த வாசனையே கொசுக்களை விரட்டி அடிக்கும்.
பூண்டின் வாசனை கொசுவினை விரட்டுமா?

பூண்டு என்றாலே பலருக்கு வாசனை பிடிக்காமல் காரணத்தினால் உணவில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அதே போன்று தான் இந்த கொசுக்களுக்கும். பூண்டை நன்றாக நசுக்கி சாறு கீழே போகாமல் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு ஸ்ப்ரே செய்யலாம். இதோடு பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணெயுடன் ஐந்துமடங்கு நீர் கலந்து பஞ்சை நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது. ஆனால் பூண்டு வாசனை இருக்கும் வரை தான் கொசுக்கள் வராமல் இருக்கும்.
கொசுவினை ஒழிக்கும் புதினா

புதினாவின் வாசனையை கொசுக்கள் விரும்பாது. எனவே புதினாவை சிறிது நீர் சேர்த்து மையமாக அரைத்து வடிகட்டி கொண்டு அதில் சிறிதளவு கற்பூரத்தை பொடியாக்கி போட்டுக்கொள்ள வேண்டும். இப்போது புதினாவுடன் கற்பூர வாசனையும் சேர்த்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்துவிட்டால் கொசு மாட்டாம் இருக்க வாய்ப்பில்லை.
கொசுவினை விரட்ட வேம்பும், நொச்சியும்

மாலை நேரங்களில் தான் அதிகளவில் வீட்டினுள் கொசுக்கள் வந்து இரவு முழுவதும் நம்முடைய தூக்கத்தினை கலைக்கின்றது. எனவே இதனை வேம்பு, நொச்சி போன்ற இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி எளிதில் விரட்டலாம். மண்சட்டி அல்லது அகன்ற பாத்திரத்தில் தேங்காய் சிரட்டையை வைத்து கற்பூரம் கொண்டு எரியவிட்டு பிறகு அதில் வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி இலைகளை சேர்த்தால் நன்றாக புகை வர தொடங்கும். இந்த புகையை வீடு முழுவதும் பரப்பும்படி அறையிலும் வைத்து எடுக்க வேண்டும். இந்த கசப்பு நிறைந்த புகை கொசுக்களை நிச்சயம் அருகில் வரவிடாது.




