சமீப காலமாக நான் வெறுக்கும் ஒரே வாக்கியம் “நாங்கெல்லாம் கொரானாவோடு வாழப் பழகிட்டோம்” என்பதுதான்.
உலகமே கொரானா பீதியில் இருக்கும் இந்நேரம் சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு இன்னும் பயம் அதிகமாக இருக்கும்.அதுவும் வீட்டில வயசானவங்க,நோய்வாய்ப்பட்டவங்க யாரும் இருந்தா இன்னும் பீதியாகத்தான் இருக்கும். இப்படி நம்ம எல்லாரும் ஒரு பக்கம் குழந்தையை வைத்துக் கொண்டு கொரானா பீதியில் வெளியிலேயே செல்வதற்கு பயந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலபேர் இதையெல்லாம் ஒரு பொருட்டாவே மதிப்பதில்லை.
என் குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக வெளியில் சென்றோம். அப்போது என் பக்கத்துவீட்டு அன்கிள் தரையில் எச்சில் துப்பிக்கொண்டே இயல்பாக தெருவில் நடந்து வருகிறார். ஒருவேளை அவருக்கு கொரானா இருந்தால் நமக்கும் வந்துவிடுமோ என்று நான் இரண்டு அடி தள்ளியே நடந்தேன். “அன்கிள் நீங்க ஏன் மாஸ்க் போடலனு” கேட்டா “நாங்கல்லாம் கொரானாவோட வாழப் பழகிட்டோம்னு” சாதாரணமா சொல்றார்.
எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடைக்கார அக்கா ஒருநாள் கூட முகவுறை,கையுறை எதுவுமே அணிவது கிடையாது. நானும் இரண்டு மூன்று தடவை விளையாட்டாக சொல்வதுபோல் சிரித்துக் கொண்டே “அக்கா,நீங்க மாஸ்க் போடலனா வேற கடைக்குப் போய்டுவோம்,அதனால நெக்ஸ்ட் டைம் வரும்போது கண்டிப்பாப் போடுங்க” அப்படினு சொல்லிப் பார்த்தாச்சி. ஆனாலும் அவங்க கேக்குற மாதிரி இல்ல.கேட்டா “நாங்கல்லாம் கொரானாவோட வாழப் பழகிட்டோம்னு” சொல்றாங்க.
தெருவுல என்னடானா எங்க பக்கத்து வீட்டு பசங்க பயப்படாம கிரிக்கெட் விளையாடிட்டு இருக்காங்க.நான் பயத்துல “ஏண்டா இப்படி எடக்கு மொடக்கா எதாவது பண்ணி கிறுக்குபிடிக்க வக்கிறீங்கனு” நெனச்சிக்கிட்டு கொரோனா டைம்ல ஏம்பா கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கிங்கனு?? கேட்டா “நாங்கல்லம் கொரொனவோட வாழப் பழகிட்டோம்க்கா.நீங்கதான் இன்னும் பயந்துட்டு வீட்டுக்குள்ளே இருக்கீங்கனு” சாதாரணமா சொல்றாங்க.
என் மனசில “அடப் பாவிங்களா நீங்கல்லாம் கொரோனாவோட வாழப் பழகிட்டிங்கடா,ஆனா சின்னக் குழந்தைங்க,ரொம்ப வயசானவங்க, நோய் வாய்ப்பட்டவங்கல்லாம் எப்படிடா கொரோனாவோட வாழப் பழக முடியும்னு” திட்டலாம்னு தோணுது.
சில நேரம் யோசிச்சா நமக்குப் பைத்தியமே புடிச்சுடும் போல இருக்கு.எனக்கு மட்டும்தான் இப்படி இருக்குதா. இல்ல வீட்டில் கைக்குழந்தையை வச்சிருக்க எல்லாருக்கும் இப்படிதான் இருக்குதானு தெரியல.வேலைக்குப் போறது அவசியம் என்றாலும் கொஞ்சம் மாஸ்க்,க்ளோவ்ஸ் எல்லாம் போட்டுப் போனா நம்மளும் கொஞ்ச பயமில்லாம இருக்கலாம். அவங்களுக்கும் அது பாதுகாப்பு, மத்தவங்களுக்கும் அது பாதுகாப்பு. ஆனால் அதை ஏன் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டேங்கிறார்கள் எனத் தெரியவில்லை.
சரி இவங்கதான் இப்படி இருக்காங்கனு பார்த்தா என் குழந்தைக்குத் தடுப்பூசி போடுற டாக்டர்கூட முகத்துல மாஸ்க், கையில கையுறை எதுவுமே போடலே.இதெல்லாம் பாக்கும்போது என்னோட மனசில “சோதிக்காதிங்கடா என்னைய”ன்ற மாதிரிதான் இருக்கு.நமக்குக் கொரோனா வருதோ இல்லையோ. ஆனா சுத்தி இருக்குற எல்லாரும் இப்படி மாஸ்க்,க்ளோவ்ஸ் எதுவுமே போடாம திரியறதப் பார்த்தா எங்க நம்ம குழந்தைக்கு அவங்களால கொரோனா வந்துடுமோனு பயத்துல ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல இருக்கு.
எனக்கு மட்டும்தான் இப்படி மனநிலை இருக்கிறதா?? இல்ல எல்லாருக்கும் ஸேம் ஃபீலிங்க்ஸ் தானான்னு தெரியல?!