தூக்கமின்மையினால் வரும் ஆபத்துகள், விளைவுகள் பற்றி பார்க்கலாம்.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கமின்மை உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் பாதிக்கிறது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 7-8 மணிநேர தூக்கம் அவசியம் என்று பல ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். அதாவது ஒரு சரியான தூக்க நேரம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தான். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இரவு உணவையே 10 மணிக்கு மேல் தான் சாப்பிடுகிறோம். பின் தூங்குவதற்கு 12 அல்லது 1 மணி ஆகிறது.இன்றைய காலத்தில் பிள்ளைகளும் இதே பழக்கத்தை தான் கடைபிடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி நடுராத்திரியில் தூங்கினால், மறுநாள் காலையில் எழும்பும் போது சோர்வாக உணரக்கூடும். நம் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் போவதால், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.ஒழுங்கற்ற தூக்க முறையால், உடல் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்
ஆய்வுகளில், 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்கும் மக்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பருமன்
சமீபத்திய ஆய்வில், தூக்க பிரச்சனைகள் இருந்தால், அதிகமான கலோரிகள் உள்ள உணவை உட்கொள்ள வைத்து, தேவையில்லாத உடல் பருமனைப் பெறச் செய்கிறது எனத் தெரியவந்துள்ளது. ஆகவே குண்டாகக் கூடாது என நினைப்பவர்க்ள், சரியான நேரத்தில், சரியான அளவு தூக்கத்தை தினமும் கடைபிடிப்பது நல்லது.
இதய ஆரோக்கியம்
தூக்க பிரச்சனைகளை சந்திக்கும் பலருக்கு இதயப் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், உடல் தூங்கும் போது தான் தன்னைத் தானே சரிசெய்கிறது. அத்தகைய தூக்கம் கிடைக்காமல் போனால், இதயம், இரத்த நாளங்கள் சரியாக செயல்படாமல் போகும்.
இன்றையக் காலக்கட்டத்தில் மாணவர்கள், பெரியவர்கள், பெரிய பிரபலங்கள் இவர்களிடையே ஏற்படும் மனக்கவலைகள், மனஅழுத்தங்கள், தற்கொலை எண்ணம் இவை அனைத்திற்குமே மூலக்காரணமாக சொல்லப்படுவது, தூக்கமின்மை தான்.
ஒவ்வொரு நாளும் ஏற்படுகின்ற தூக்கமின்மை காரணமாக, மனநோய்க்கான அறிகுறிகள் சராசரியாக 20 சதவிகிதம் அதிகரிக்கின்றன.
தூக்கமின்மையினால் அதிகரிக்கும் ஆபத்துகளின் பட்டியலில்,
- 21 சதவிகிதம் – மனச்சோர்வு
- 24 சதவிகிதம் – தன்னம்பிக்கையின்மை, கோபம், கவலை
- 25 சதவிகிதம் – தன்னைத்தான் வருத்திக்கொள்ளும் விருப்பம்
- 28 சதவிகிதம் – செயல்பாட்டு பிரச்சனைகள்
- 28 சதவிகிதம் – தற்கொலை எண்ணம்.
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் தூக்கம் மிக மிக அவசியம்.நன்றாக தூங்கும் போது தான் சில முடிவுகளை கூட நம்மால் எடுக்க முடியும்.மனதும் சீராக இயங்கும். தூக்கத்திற்கென நமக்கு நாமே ஒரு நேரத்தை ஒதுக்குவோம். சரியான நேரத்தில் தூங்குவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.