நானும் என் கணவரும் அப்போது வெளிநாட்டில் இருந்தோம். வெளிநாட்டில் வருடத்திற்கு ஒருமுறை ஃபால் கலர் சீசன் வரும். அதாவது ஃபால் கலர் சீசன் என்னவென்றால் இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் நேரம்.
மரத்திலுள்ள அனைத்து இலைகளும் உதிர ஆரம்பிக்கும். அப்படி உதிர ஆரம்பிக்கும் முன்பு அந்த இலைகளின் நிறமானது தன் இயல்பு நிலைமாறிக் காணப்படும்.அதாவது அது தன்னுடைய இயல்பு நிலையான பச்சை நிறத்திலிருந்து மாறி சிவப்பு, மஞ்சள்,ஆரஞ்சு எனப் பல வண்ணங்களில் பிரகாசமாகக் காட்சியளிக்கும். அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.
அந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே எல்லா மக்களும் அதற்கென்று பிரத்யேகமாக ஒரு சில சுற்றுலாதளங்களில் குவிந்து கிடப்பார்கள்..
நாங்களும் அப்படி ஃபால் கலர் பார்ப்பதற்காக எங்கள் வீட்டிலிருந்து “ஸ்மோக்கீஸ்” என்ற இடத்துக்கு கிளம்பினோம்.அதாவது நம்ம ஊர் ஊட்டி, கொடைக்கானல் மாதிரினு வச்சிக்கோங்களேன்.
அப்படி ஃபால் கலர் பார்க்க செல்லும் வழியில் என் கணவர் பொழுதுபோகாமல் எனக்குக் கார் ஓட்டப் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் முதலில் காரைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தார். அப்படி அவர் சொல்லிக் கொடுக்கும் போது எல்லாம் புரிந்தமாதிரி மண்டைய மண்டைய ஆட்டிட்டு அப்பறம் ஃப்ரீயா வுட்டேன்.
ஏன்னாப் புரியலனு சொன்னாத் திரும்பித் திரும்பி சொல்லிக் கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரேனு பயந்து , எல்லாம் புரிஞ்ச மாதிரியே ஒரு ஆக்ஸன் பண்ணிட்டேன். ஆனால், ப்ராக்டிகல் எக்ஸாமும் அன்னைக்கே இருக்கும்னு அப்போ எனக்குத் தெரியாமப் போச்சு.ஏன்னா அதற்குப்பின் அவர் என்னிடம் காரைக் கொடுத்து ஓட்டிக் காண்பிக்கச் சொன்னார். நான் இன்னொரு நாள் ப்ராக்டிகல் எக்ஸாம் எழுதுறேன்னு எவ்வளவு சொல்லியும் அவரு நான் சொல்றதக் கேக்கவேயில்ல. அதெல்லாம் முடியாது நீ இன்னைக்கு கார் ஓட்டியே ஆகனும்னு ஸ்டிர்க்டா சொல்லிட்டாரு. சரி இன்னைக்கு ஆனது ஆகட்டும். அவருக்கு நேரம் சரியில்லன்னா நாம் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தேன்.
அப்போது வடிவேலு முத்து படத்தில் கேட்பாரே,”ஏம்பா!காருக்கு எதுக்குப்பா அச்சாணி”என்று, அந்த மாதிரி நானும்.”ஏங்க இதுல ப்ரேக் எங்கங்க இருக்கு? கியர் எங்கங்க இருக்குனு? “ கேட்டுட்டே வந்தேன். அதுக்கப்பறம் பேசிக்கிட்டே ப்ரேக்குக்குப் பதிலா கியர மாத்திப் போட்டேம் பாருங்க, வண்டி சும்மா சர்ருனு அடிச்சு ரோட்டோரமா இருக்குற மரத்தப் பார்த்து போயிடுச்சு😀எப்படியும் காரு மரத்துல முட்டப் போகுது அதனால கண்ண மூடி சாமியக் கும்பிட்டுப் போய் சேரலாம்னு நெனச்சுட்டு, கண்ண மூடிக்கிட்டு, ”முருகா!முருகா!” னு சொல்ல ஆரம்பிச்சிட்னேன்.அதுக்கப்பறம் கண்ணத் திறந்து பார்த்தா, மரத்துல லைட்டா முட்டுன மாதிரி கார் சக்குனு நின்னிடுச்சு..
அப்பாடா முருகன் காப்பாத்திட்டாருனு நெனச்சுக்கிட்டு ,என் வீட்டுக்காரங்கட்ட சொன்னா, “முருகர் உன்னைப் காப்பாத்தல, நான்தான் ஹேண்ட் ப்ரேக் போட்டு உன்னக் காப்பாத்துனேன்”. அப்படினு அவரு சொல்றாரு. சரி யார் காப்பாத்துனா என்ன, எப்படியோ பொழச்சிட்டோம்பா..! அப்படினு பெருமூச்சி விட்டுட்டு, சரி வாங்க ஆனது ஆயிடுச்சு, அதான் காருக்கு ஒண்ணும் சேதாரம் இல்லையே?! நம்ம ட்ரைவிங் க்ளாஸக் கண்டினியூ பண்ணலாம்னு நான் சொன்னேன். உடனே அவரு “என்னது திரும்பவும் முதல்ல இருந்தா?வேண்டாம்,வேண்டாம் நீ இன்னோரு நாள் கார் ஓட்டக் கத்துக்கோ , இன்னைக்கு நானே கார் ஓட்டுரேன்னு” சொல்லிட்டாரு..பாவம் பயந்துட்டாரு போல னு நெனச்சுக்கிட்டேன்😀
அதுக்கப்பறம் அவருதான் கார் ஓட்டினாரு, கடைசியா எப்படியோ நாங்க போற இடம் வந்திடுச்சு.இயல்பாக பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கின்ற மரமானது, அதன் இயல்பு நிலை மாறி வண்ணமயமாகக் காட்சி அளித்தது பிரம்மிப்பாக இருந்தது. அங்கு இருக்குற செடிங்கள்ல, மரங்கள்ல இருக்குற இலைகள் எல்லாம் சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என ஒவ்வொன்னும் ஒவ்வொரு கலர்ல பார்க்கவே கண்ணைப் பறிக்குற மாதிரி இருந்துச்சு. அத்தனை மனிதர்கள் அந்த இடத்தில் இருந்தாலும்,யாருமே அந்த மரங்களோட இலைகளோட அழகுக்கு ஈடாகவே முடியாது.. அந்த அளவுக்கு அழகாக இருந்தது அந்த மரங்களும், செடிகளும், அதிலுள்ள இலைகளும்! அதுக்கு இடையிடையே ஓடுகின்ற நீரோடைகளும்!..
அப்படியே சினிமாப் பாட்டில் காண்பிப்பது போலவே இருந்தது அந்த இடம்.. அப்போதுதான் “அணையப்போற விளக்கு பிரகாசமாக எரியும்” என்று சொல்வார்களே? அது உண்மைதான் என்று தோன்றியது, ஏனென்று கேட்டால் இலையுதிர் காலத்தில் உதிரப் போகும் இலைகள் உதிர்வதற்கு முன் இவ்வளவு அழகாக வண்ணமயமாகப் பிரகாசமாக காட்சியளிக்கிறதே! என்று நினைத்து வியந்து பார்த்தேன். அந்த ஒரு நொடியில் அந்த அழகான இலைகள் உதிரப் போவதை எண்ணி அவைகளுக்காக நானும் மனம் வருந்தினேன்! இறைவனின் அற்புதமான படைப்புகளுள் இதுவும் ஒன்று போல என்று நினைத்துக் கொண்டேன்!