சமீப காலமாக நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதற்கு மூலக் காரணம் யார் என்று கேட்டால் பெற்றோர்கள்தான்.. என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆம்..! உண்மையைத் தான் சொல்கிறேன்..பெற்றோர்களேதான்..!
“அது ஏன் அப்படி?” என்று கேட்கிறீர்களா?? சொல்கிறேன்..

ஒரு பெண் பிள்ளை பிறந்தால் அத்தனை கட்டுப்பாடுகளுடன் அப்பிள்ளையைப் பயந்து பயந்து ஒழுக்கம் சொல்லிக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அதே ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அதில் பாதியளவுக் கட்டுப்பாடுகள் கூட அப்பிள்ளைகளுக்கு விதிப்பதில்லை.. அவர்களை சுதந்திரமாக அலைய விட்டுவிடுகின்றனர்.. ஏனென்று கேட்டால் “நீ ஆம்பளப் புள்ளடா..! ,என் சிங்கக் குட்டிடா.!” என்று வீரவசனம் பேசி அளவிற்கு அதிகமாக அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து கெடுத்துவிடுகின்றனர்..
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறப்பதிலே.. அது நல்லவராவதும்,தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.. “
என்ற பாடல் வரிகளில் உள்ள கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.. எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது நல்ல குழந்தைகளே.. அவர்கள் நல்லவர்களாவதும், தீயவர்களாவதும் அதனைப் பெற்றோர்கள் வளர்க்கும் விதத்திலேதான் உள்ளது..
பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளிடம் “ஆண்களிடம் பார்த்து கவனமாக நடந்து கொள் ” என்று அறிவுரை கூறி வளர்ப்பதைப் போல், தன் ஆண் பிள்ளைகளிடம் “எந்தப் பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது” என்று சொல்லி வளர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்று நினைக்கிறேன்..
இரவில் வெளியே செல்லும் தன் பெண் பிள்ளைகளிடம் ஆயிரம் கேள்விகள், ஆயிரம் அறிவுரைகள் சொல்லி அனுப்பும் பெற்றோர்கள், ஒரு ஆண்பிள்ளை நேரம் கெட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றால்,”ஏன் செல்கிறாய்? எதற்கு செல்கிறாய்?” என்று சில கேள்விகளாவது கேட்டு அனுப்பினால்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கு மேல் குறைந்துவிடும்..
பெண்பிள்ளைகளின் தொலைபேசியை எப்போதும் எடுத்துச் செக் பண்ணும் பெற்றோர்களே..! உங்கள் ஆண் பிள்ளைகளும் தொலைபேசியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனத்துடன் கண்காணித்துக் கொள்ளுங்கள்..

பெண் பிள்ளைகள் தன் தோழிகளின் திருமணத்திற்கு சென்றால் கூட ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்து அனுப்பும் பெற்றோர்களே..! உங்கள் ஆண்பிள்ளைகள் அவர்கள் நண்பர்களுடன் எங்கு செல்கிறார்கள்..? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? என்பதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்..!
“பெண்ணைப் பாதுகாப்பவனே ஆண்.. ஆதலால் மற்ற பெண்களுக்கு நீ ஒரு பாதுகாவலனாய் இருக்க வேண்டும்.. இரவில் ஒரு பெண் தனியாகச் சென்றாலும் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளாமல் அப்பெண்ணிற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று ஒவ்வொரு பெற்றோரும் தன் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.. அப்போதுதான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடுத்த தலைமுறையிலாவது குறையும்..
ஒவ்வொரு ஆண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களும்..
“பெண் என்பவள் ஒரு காட்சிப்பொருள் அல்ல,உன்னைப் போல அவளும் இந்த பூமியில் ஜனித்த ஒரு உயிர்..ஆதலால் அவ்வுயிருக்கு யாதொரு தீங்கும் நிகழாமல் பாதுகாப்பது ஆண்பிள்ளைகளாகிய உங்களின் கடமை” என்று சொல்லிக் கொடுத்து வளர்த்தாலே போதும் , பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்..




