தென்னை மரத்தினாலும் மனிதர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன, அதுபோலத்தான், அந்த தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீரிலும் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. இளநீர், மனிதர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். அந்த இளநீரைப் பருகுவதால், கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இளநீர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? எவ்வளவு இதம், என்னவொரு குளுமை. கோடை காலம் வந்துவிட்டதும், தகிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாகக் கிடைக்கக் கூடியது, இளநீரே. கோடைக் காலத்தில் இதைத் தேடிப் போக வேண்டிய அவசியமில்லாமல், எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
இயற்கை எலெக்ட்ரோலைட்டுகள்
இளநீரானது எலக்ட்ரோலைட், குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. இதில் எலக்ட்ரோலைட் இருப்பதால், உடலில் நீரேற்றம் மற்றும் சகிப்பு ஆற்றலை மீட்பதற்கு பயன்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்பக் காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு தகுந்த நிவாரணி, இளநீர் தான்.
செரிமான உதவி
இளநீர் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.
உயிர் தரும் திரவம்
இளநீர் ‘உயிர் தரும் திரவம்’என மருத்துவர்களால் போற்றப்படுகிறது. காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசரக் காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’போல் ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையிலிருப்போர்க்கு உயிர் தரும் மருந்தாகிறது. அதோடு நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்து பிடிபட பெரிதும் உதவுகிறது.
இளநீரில் உள்ள சத்துக்கள்
இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும், முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். இதற்கு அதில் உள்ள ‘சுக்ரோஸி’ன் அளவே காரணம். இளசாக உள்ள போது, இதில் ‘சுக்ரோஸ்’ அதிக அளவு இருக்கும். இதைத் தவிர இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.
பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. இளநீரைப் பருகுவதோடு, அதில் உள்ள இளசான தேய்காய்ப் பகுதிகளையும் சாப்பிடுவது நல்லது. அதோடு சதைப் பகுதி புரதச்சத்தும் நிறைந்ததாகும்.
நோய் தடுக்கும் இளநீர்
கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், காலரா, தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.
உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக். இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வை இளநீரில் உள்ள இனிப்புத் தன்மை நீக்குகிறது.
நச்சு நீக்கி
நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது.
சரும பாதுகாப்பிற்கு
இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் விரட்டவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.
புற்றுநோய்
சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.
தீக்காய நிவாரணி
தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது.
எடை இழப்பு
இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது.
இயற்கை நீர்ப்பெருக்கிகள்
இயற்கை நீர்ப்பெருக்கியாக இருப்பதால், இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.
நோயெதிர்ப்பு சக்தி
இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோய்க்கு எதிராகப் போராட உதவுகின்றது. மேலும் இது தாய்ப்பாலின் பண்புகளான பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது படர்தாமரை, எச்.ஐ.வி, ஜியார்டியா லாம்ப்லியா, கிளமீடியா மற்றும் ஹெலிகோபட்டர் போன்ற வைரஸ்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.