பிரண்டையில் என்னவெல்லாம் பயன் இருக்கு என்பதைத் தெரிந்துகொண்டால், இனி வாரம் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் கண்டிப்பாக பிரண்டை சமையல் இருக்கும்.கால்சியம் குறைவு, நினைவுத்திறன் இல்லை, உடலில் மந்தம், மூலத்தால் அவதி, எலும்புக்குறைபாடு இப்படி எல்லாப் பிரச்சனைகளைகளுக்குமே பிரண்டையைப் பயன்படுத்தினாலே போதுமானது.
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும். மூலிகை பொருள்களையும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கியமானவை பிரண்டை.
இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டையைத்தான் நாம் அதிகம் உபயோகப்படுத்துகின்றோம்.
பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும். அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.
பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டையின் வேரும், தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது.
குடல் புண், இரைப்பை அழற்சி, வயிற்றுப்பொருமல், சிறுகுடல் மற்றும் பெருங்குடல் புண் போன்றவற்றை நீக்கவும் துணைபுரிகிறது. பல் சொத்தை, பல் கூச்சம் மற்றும் பல் வலி என மொத்தமாய் காணாமல் போக பிரண்டை உதவுகிறது. குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற பிரண்டை போதும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பிரண்டைத்துவையல் போல் பிரண்டை இலை துவையலும் இதற்கு உதவுகிறது.
பிரண்டையின் நன்மைகள்
வாயுக்களை விடுவிக்கும்
வாயுக்கள் அதிகமாகும் போது, நமது உடலில் இருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற நீர் தேங்கிவிடும். இவை உடலில் வலிகளை உண்டாக்கும். இந்த நீர் தான் வாயு நீர் என்றழைக்கப்படுகிறது.இதனால் தீவிர கழுத்துவலி, முதுகுவலி, கால்வலி போன்ற உபாதைகள் உண்டாகும். பிரண்டையைத் துவையலாக்கி சாப்பிடுவதன் மூலம் இந்த வாயுநீர் வெளியேறும். மேலும் வாயு நீர் சேராமல் தடுக்கும். வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்கள் வலுவான உடலை பெறுவார்கள்.
எலும்பை வலுப்படுத்தும்
கால்சியம் மாத்திரைகள் எலும்புகளின் உறுபத்திக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் பிரண்டயை விடாமல் சாப்பிட்டால், எலும்புகள் வலுப்பெறுவதோடு மட்டுமல்லாமல், எலும்புகள் விரைவில் உடையவோ, விலகவோ செய்யாது.
மூட்டுகளில் வீக்கம், வலி, சுளுக்கு போன்ற உபாதைகள் உண்டாகும் போது பிரண்டையை பற்றாக்கி போட் டால் வலி நாளடைவில் பறந்துவிடும். பழங்கால சிகிச்சை முறையில் இதைத்தான் நமது முன்னோர்கள் பயன்படுத்தி எலும்பு குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டை, எலும்பு உயிரணு பெருக்கத்தை அதிகரிக்க செய்கிறது.
மாதவிடாயிலும் பிரண்டை
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஒழுங்கற்ற மாத விடாய், மாதவிடாய்க் காலங்களில் அதிக உதிரப்போக்கு என்று அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இந்தப் பிரச்சனை வராமல் தவிர்க்கலாம்.
பிரண்டையை நறுக்கி சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து குடித்துவந்தால் சீரற்ற மாதவிடாய் சீராகும். மாதவிடாய்க் காலங்களில் முதுகுவலி இடுப்புவலி என்று அவதிப்படும் பெண்கள் பிரண்டையை மாத விடாய் வருவதற்கு ஒருவாரம் முன்பு எடுத்துகொண்டால் வலியிலிருந்து தப்பிக்கலாம். இவைத் தவிர பிரண் டைத் துவையலும் சாப்பிடலாம்.
பிரண்டைத் துவையல்
முற்றல் இல்லாத இளம் பிரண்டையை வாங்கி தோல் நீக்கி நார் எடுத்தபிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இவை கைகளில் நேரடியாக படும்போது நமைச்சல் மற்றும் அரிப்புகளை உண்டாக்கும் என்பதால் கைகளில் எண்ணெய் தடவிகொண்டு நறுக்குவது நல்லது.
தேவையான பொருள்கள்
- நறுக்கிய பிரண்டை துண்டுகள்-1 கப்
- உ.பருப்பு- கால் கப்,
- காரத்துகேற்ப வரமிளகாய்
- புளி- கோலி அளவு
- தேங்காய்- சிறிதளவு
- உப்பு- தேவைக்கு ஏற்ப
செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள பொருள்களை, வாணலியில் எண்ணெய் விட்டு, ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் இந்தப் பிரண்டை துவையல். சூடாக இருக்கும் உதிரான சாதத்தில், லேசாக நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இப்படி கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் சிறுவயது முதலே உடலில் வாயுநீர் தங்காமல் இருக்கும்.
பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்வோம்.ஆரோக்கியமாய் வாழ்வோம்!!